SKIP TO MAIN CONTENT

35 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருளுடன் இலங்கையர் இருவர் பெர்த்தில் கைது!

File image
Source: AFP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

சுமார் 35 மில்லியன் ஆஸ்ரேலிய டொலர் பெறுமதியான போதைப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப்பின்னணி கொண்ட இருவர் பெர்த் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சில நாட்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலீஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறிப்பிட்ட வீட்டிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மூன்று வீடுகள் சோதனையிடப்பட்டபோது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலீஸாரால் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்களிலிருந்து பெர்த்திற்கு போதைப்பொருட்கள் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்தப்போதைப்பொருட்கள் குறிப்பிட்ட வீடொன்றின் அறைகளில் பொதி செய்யப்பட்டு விநியோகத்துக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும், பெரிய பொதிகளிலிருந்து எடுக்கப்பட்டு சிறிய பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த நிலையில் இந்தப்போதைப்பொருட்களை தாங்கள் கைப்பற்றியதன் மூலம் ஆஸ்திரேலிய தெருக்களுக்கு இறங்கவிருந்த மிகப்பெரிய ஆபத்தினை தாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் இந்தக்குற்றச்செயலில் எவ்வளவு தூரம் பங்கு வகித்திருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் தங்களுக்கு உரித்துடைய வீட்டில் இந்தப்போதைப்பொருட்களை வைத்திருந்ததன் மூலம் இவர்களுக்கு இந்தக்குற்றத்தில் பங்களிப்பிருப்பதாகவே இப்போதைக்கு நம்பவேண்டியுள்ளது என்றும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் ஏனையவர்கள் குறித்து பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் பெறுமதி தற்போதைய இலங்கை ரூபா மதிப்பின்படி கிட்டத்தட்ட 435 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now