இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது படகு கவிழ்ந்து 353 அகதிகள் பலியான சம்பவத்துக்கு பொறுப்பான ஆட்கடத்தல்காரர் என்று கூறப்படும் நபர் நியூசிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தநிலையில் பிறிஸ்பன் விமானநிலையத்தில் வைத்து பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாக அனுப்பிவைக்கின்ற முக்கியமான ஆட்கடத்தல்காரர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈராக்கை சேர்ந்த Maythem Radhi (43) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு இவருக்கு 24 வயதாகவிருந்தபோது, இந்தோனேஷியாவிலிருந்து இவரால் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 421 அகதிகளை தாங்கிய படகு, கிறிஸ்மஸ்தீவை நோக்கி வரும்வழியில் நடுக்கடலில் கவிழ்ந்து அதிலிருந்த 146 குழந்தைகள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர். இவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் அகதிகள் என்று கூறப்படுகிறது.
அகதிகளிடம் பெருந்தொகையான பணத்தைப்பெற்றுக்கொண்டு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்பிவைப்பது மாத்திரமன்றி, வேறு நாடுகளிலிருந்து அகதிகளை அழைத்துவந்து இந்தோனேஷியாவில் இருப்பிடங்களை வழங்கி பின்னர் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் அனுப்பிவைக்கின்ற பாரிய ஆட்கடத்தல் வலையமைப்பை பேணிவந்தவர் என்றும் இவர் தொடர்பில் ஆஸ்திரேலியா பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
அகதி அந்தஸ்து பெற்று கடந்த 2009ம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவந்த Maythem Radhi மீது விசாரணை நடத்தவேண்டியுள்ளதால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடுகடத்துமாறு 2010ம் ஆண்டு தொடக்கம் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை நாடுகடத்தப்பட்டிருந்தார்.
இந்நபர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 31ம் திகதி நடைபெறவுள்ள அதேநேரம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் பத்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் அகதிகளை அனுப்பிய மூன்றாவது நபர் இவ்வாறு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுகிறார்.
ஏற்கனவே, ஈராக் நபர் ஒருவர் சுவீடனிலிருந்து நாடு கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா நீதிமன்றினால் ஒன்பது வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
அதேபோன்று, இன்னொரு முக்கிய ஆட்கத்தல்காரருக்கு எகிப்து நீதிமன்றத்தினால் ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.