பிரிஸ்பன் ஹோட்டலொன்றில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேர், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப்பிறகும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Kangaroo Point Central Hotel & Apartments பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டு Kangaroo Point Central Hotel & Apartments பகுதியில் சுமார் 120 அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், நேற்றையதினம் அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தபோது, அதற்கு இரண்டு மணிநேரம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குப்பின்னரும் ஹோட்டலுக்கு முன்பாக அமர்ந்திருந்து அங்கிருந்து வெளியேற மறுத்த நாற்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவுறு மற்று மனுஸ் தீவுகளில் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டு மருத்துவ காரணங்களுக்காக பிரிஸ்பனுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அகதிகளில் சிலர், பிரிஸ்பன் ஹோட்டலில் ஒரு வருடத்துக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
