மெல்பேர்னில் Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்களை வென்ற நபர் யாரென்று தேடப்பட்டு வந்தநிலையில், அந்நபர் 175 நாட்கள் கழித்து தனது பரிசினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி 11ம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் 32, 7, 5, 34, 38 & 11 மற்றும் Powerball-க்கான 12 ஆகிய இலக்கங்களைக்கொண்ட அதிஷ்டலாபச்சீட்டு 55 மில்லியன் டொலர்களை வென்றது.
மெல்பேர்னின் Brunswick பகுதியிலுள்ள Scole Lotto and News என்ற கடையில் இந்த அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது நீண்ட நாட்களாக தெரியவரவில்லை.
இச்சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் எவரும் உரிமைகோராவிட்டால் அதனை விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
இதன்படி குறித்த பரிசுத்தொகை விக்டோரியா State Revenue-விடம் ஒப்படைக்கப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக வெற்றியாளர் தகுந்த ஆதாரத்தைக் காட்டி பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் பரிசினைப் பெற்றுக்கொள்வதை 5 மாதங்களுக்கு மேல் அவர் ஏன் தாமதப்படுத்தினார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை..
அதேபோல் தான் யார் என்ற அடையாளத்தையும் அந்நபர் வெளிக்காட்ட விரும்பவில்லை என்பதால் இவ்வளவு பெரிய தொகையை வென்றது யார்? அப்பணம் எவ்வாறு செலவிடப்படவிருக்கிறது? என்ற விபரங்கள் எதுவும் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.
