850 வருடங்கள் பழமைவாய்ந்த உலகப்பிரசித்தி பெற்ற பிரெஞ்சு தேவாலயமும் அருங்கலைப்பொக்கிஷமுமான Notre-Dame Cathedral கொடிய தீ விபத்தில் சிக்கி எரிந்துகொண்டிருக்கிறது.
ஏற்கனவே இடம்பெற்றுக்கொண்டிருந்த தேவாலயத்தின் உள்ளக கட்டட வேலைகளிலிருந்து கிளம்பியதாக கூறப்படும் சிறிய தீ, மாலை 4.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் குறுகிய நேரத்தில் மிகவேகமாக பரவிய நெருப்பு Notre-Dame தேவாலயத்தின் கூரையில் பற்றி முற்றாக அது இடிந்து வீழுமளவுக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாரிஸ் நகரிலுள்ள 70 தேவாலயங்களிலேயே மிகப்பெரியது மாத்திரமல்லாமல் உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் வந்துகுவியும் பிரான்ஸின் தேசிய அடையாளங்களில் ஒன்றான Notre-Dame தேவாலயத்தின் வரலாறு 850 வருடங்கள் பழமை வாய்ந்தது. நாளொன்றுக்கு முப்பதாயிரம் பேர் இந்த தேவாலயத்துக்கு வந்து போவது வழக்கம். வருடத்துக்கு ஒருகோடியே 30 லட்சம் பேர் இந்த தேவாலயத்தின் வனப்பை கண்டுகளிப்பதற்கென்று உலகெங்கிலுமிருந்து வருகை தருகிறார்கள். சுமார் இருநூறு அடிகள் உயரமான இந்த தேவாலயம் Our Lady of Paris என்று அழைக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாடு தங்களது கட்டடக்கலையின் தொன்மையையும் புகழையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டிய இந்த தேவாலயம் பல்வேறு காலகட்டங்களில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பிரான்ஸின் தேசியச்சொத்துக்களில் ஒன்றாக உள்ளது. தேவாலயத்தின் உட்கட்டமைப்புக்களுக்காக பன்னிரண்டாம் நூற்றாண்டில் 52 ஏக்கர் பரப்பிலிருந்த சுமார் 1300 விலோ மரங்கள் தறித்துக்கொண்டுவரப்பட்டு, அவற்றில் வேலைப்பாடுகள் செய்து பொருத்தப்பட்டன.
தேவாலயத்துக்கு வரலாற்றுப்பூர்வமான பல சம்பவங்களும் உள்ளன. உலகளவிலுள்ள மிகப்பெரிய சமயத்தலங்களில் ஒன்று என்பது மாத்திரமல்லாமல், நெப்போலிய மன்னன் தனக்கு முடிசூடிக்கொண்டதும் இந்த தேவாலயத்தில்தான். பிரஞ்சுப்புரட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் வெறுப்படைந்த மக்கள் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவந்தபோது, தேவாலயத்திலிருந்த சுமார் 28 மன்னர் சிலைகளுக்கு சிரச்சேதம் செய்தார்கள். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதனை திருத்திக்கொண்டார்கள்.
சுமார் 6 மில்லியன் யூரோ செலவில் தேவாலயத்தின் உட்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கான வேலைகள் அண்மையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த பெருந்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் பெருவிழாவுக்காக உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் உலகளாவிய கிறிஸ்தவர்களினது அடையாளச்சின்னங்களில் ஒன்றான Notre-Dame தேவாலயத்தில் இடம்பெற்ற இந்த தீ விபத்து லட்சக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
