ஆஸ்திரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் நியூசிலாந்து குடிமக்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் Special Category (subclass 444) என்ற விசாவின் கீழ் ஆஸ்திரேலியா வந்து வேலை செய்யவும், வீடுவாங்கவும், வரையறை இன்றி அல்லது காலக்கெடு எதுவுமின்றி தங்கியிருக்கவும் தற்போது சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற இயலாது.
எனினும் இந்த சட்டத்தை மாற்றி ஆஸ்திரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர் குடியுரிமை பெறுவதற்கான இணக்கப்பாடு கடந்த 2016 பெப்ரவரி மாதம், முன்னாள் நியூசிலாந்து பிரதமர் John Key பிரதமர் Malcolm Turnbull இடையிலான சந்திப்பின்போது எட்டப்பட்டது.
இதன்படி கடந்த 2016 பெப்ரவரி 19 திகதிக்கு முன்னராக ஆஸ்திரேலியா வந்த, ஆகக்குறைந்தது இங்கு 5 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து குடியுரிமை கொண்டவர்கள், ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
குடிவரவுத் திணைக்களம் எதிர்பார்க்கும் சில தகுதிகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும்.
ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமையுடன் ஒரு ஆண்டு வாழ்ந்த பின்னர் இவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் பெப்ரவரி 26, 2001-க்கு முதலிருந்தே ஆஸ்திரேலியாவில் Special Category விசாவுடன் வாழ்ந்து வரும் நியூசிலாந்து குடிமக்கள் நேரடியாகவே ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெறக்கூடும்.
இந்தநிலையில் தகுதியுள்ள நியூசிலாந்து குடிமக்கள் ஜுலை 1ம் திகதி முதல் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமென குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு DIBP Website - Fact sheet - New Zealanders in Australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
Share
