SKIP TO MAIN CONTENT

A Promised Land

A Promised Land நூல் ஆய்வு: இரா. சத்யநாதன்.

President Barack Obama's Memoir "A Promised Land" Goes On Sale Ahead Of Holiday Season
Former US President Barack Obama's memoir 'A Promised Land'. Source: Getty Images North America

5 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

Barack Obama எழுதி, அமெரிக்காவின் புதிய அதிபர் Joe Biden பதவியேற்பதற்கு சில மாதங்களுக்கு முன் வெளியான A Promised Land என்ற நூல், முதல் ஒரு மாதத்தில் மட்டும் 33 லட்சம் பிரதிகள் விற்பனையாகின.

தொடர்ந்து பல லட்சம் பிரதிகள் சர்வதேச ரீதியாக விற்பனையாகி best seller ஆக இருப்பதுடன் இதன் ebook மற்றும் audio book என்பனவும் பல லட்சம் பிரதிகள் தொடர்ந்து விற்பனையாகிவருகின்றன.

ஆப்ரகாம் வழிவந்தோருக்கு கடவுள் தருவதாக வாக்களித்த, ‘எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும் பூமி’தான் Promised Land என்று வேதாகமத்தில் கூறப்பட்டிருந்தாலும் இன்றைய நவீன கட்டமைப்பில் பார்க்கும்போது ‘எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நனவாகும் பூமி அல்லது இடம்’ என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும்.

வரலாற்றின் பல பக்கங்களை எளிதாக கடந்து போய்விடலாம். ஆனால் சில பக்கங்களை அத்தனை எளிதாக கடந்து போய்விடமுடியாது. முதலாவது உலகப்போர், இரண்டாவது உலகப்போர், மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தது, ஜெர்மன் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் யூனியன் பிளவுபட்டது, 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல் என்று எளிதில் கடந்து போக முடியாத சில வரலாற்று நிகழ்வுகளுக்குச் சமமான நிகழ்வாகத்தான், அமெரிக்காவில், சாதாரண மத்தியதர குடும்ப பின்னணியைக்கொண்ட சிறுபான்மை கறுப்பின ஆபிரிக்க அமெரிக்கரான Barack Obama, அதிபராக தெரிவுசெய்யப்பட்டதையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

Former US President Barack Obama speaks at at an event in 2019.
Former US President Barack Obama speaks at at an event in 2019. Source: AAP

Barack Obama இரு தடவைகள் அதிபராக பணியாற்றி பல வருடங்கள் ஆன இன்றைய நிலையிலும் கூட, கறுப்பின ஆபிரிக்க அமெரிக்கர்கள் சக அமெரிக்கர்களாலும் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டிய அதிகாரிகளாலும் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு ‘Black lives matters’ போன்ற இயக்கங்கள் உருவானதன் பின்னணியைப் பார்த்தாலே போதுமானது.

Obama அதிபராகப் பதவியேற்பதற்கு முந்தைய சுமார் 200 வருடகால அமெரிக்க அரசியல் வரலாற்றைப் பார்க்கின்ற போது, ஆபிரிக்க அமெரிக்கர்கள் அடிமைகளாக இருந்ததும், வெள்ளையினத்தவர் பயன்படுத்திய பொது ஊர்திகள், கடற்கரைகள், clubs என்ற விடுதிகள், பாடசாலைகள், நீச்சல் தடாகங்கள் என்பவற்றில் கறுப்பினத்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, அவர்களுக்கான அரசியல் உரிமைகளும் வெகுவாக மறுக்கப்பட்டிருந்தன என்பதை வரலாறு சொல்கிறது.

Abraham Lincoln அதிபராக பதவியிலிருந்த 1862 ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையிலிருந்து கறுப்பினத்தவர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களைப்பொறுத்த அளவில், சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளில் 2000 ஆம் ஆண்டளவில் சில மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டிருந்தாலும் கூட, கறுப்பின ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவர், அதிபராக தெரிவுசெய்யப்படக்கூடும் என்பது தொலைதூர கனவாகவே இருந்தது.

இந்தச்சூழ்நிலைகள் வெகுவாக மாற்றமடையாத 2008இல், அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத் தாக்குதலில் 3000 இற்கும் அதிகமான பொதுமக்கள் 2001 இல் கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் செயல்பட்டார்கள் என்பதால், முழு அமெரிக்காவும் இஸ்லாமியர்களைச் சந்தேகக்கண்களுடன் பார்க்கத்தலைப்பட்டிருந்த காலகட்டத்தில், கென்யாவைச் சேர்ந்த கறுப்பின ஆபிரிக்கரும் , இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவருமான தந்தைக்கும், வெள்ளையின அமெரிக்கப்பெண்மணிக்கும், ஹவாய் தீவில் பிறந்து, தன் இளமைக்காலத்தை இந்தோனேஷியாவில் கழித்த,இஸ்லாமிய பெயரைக்கொண்ட Barack Hussein Obama, அமெரிக்காவின் 44ஆவது அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு எளிதில் கடந்துபோகக்கூடிய ஒன்றல்ல.

Former US president Barack Obama
Barack Obama has taken to Twitter to send a farewell message to followers as his presidency ends. (AAP) Source: AP

கடுமையான உழைப்பும், தளர்வடையா முயற்சியும், கல்வியின் மூலமாகவே தானும் தனது சமூகமும் முன்னேற முடியும் என்பதில் அசையாத நம்பிக்கையும், தான் கற்றதும் பெற்றதும் மற்றவரின் நலனுக்காக, குறிப்பாக வாய்ப்பு வசதி குறைந்தோரின் நலனுக்கு பயன்படவேண்டும் என்ற திடசங்கற்பமும் காரணமாக, Barack Obama-வால் சிகரத்தைத்தொடமுடிந்தது.

Obamaவின் A Promised Land அவரது சுய சரிதையல்ல. Memoir என்ற நினைவுக்குறிப்புகள். 1996 இல் அவர் Illinois மாநில செனட்டர் பதவிக்குப் போட்டியிட்டது தொடக்கம் 2010 இல், அதாவது அதிபராகப்பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் Osama Bin Laden கொல்லப்பட்டதுவரையிலான அவரது நினைவுக்குறிப்புகள்தான் இந்த நூல்.

இது நிச்சயமாக ஒரு வரலாற்று நூல்தான் என்றபோதும் இந்த நூலின் இலக்கியத்தரம் குறித்து யாருக்குமே இரண்டு கருத்துக்கள் இருக்கமுடியாது. மொழிநடை, வார்த்தைப்பிரயோகம், வர்ணனை, சம்பவங்களுக்கிடையேயான தொடர்பு, தான் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என்றபோதும், அதை வெளியிலிருந்து மூன்றம் நபர் போல பார்க்கும் தோரணை, தனது செயல்களையும் தன்னையும் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளும் நிலைப்பாடு, சாதாரண சராசரி மனிதனாக செயல்படவிழையும் மனிதத்துவம் என்று ஒரு நேர்மையான மனிதனாகவும், அந்த நிகழ்வுகளை விவரிக்கும் இலக்கியவாதியாகவும் Obama இந்த நூலில் வெளிப்படும் சந்தர்ப்பங்கள் பல.

எல்லாவற்றிற்கும்மேலாக, அன்றாட நிகழ்வுகள் பற்றிய தெளிவான, நேர்மையான குறிப்புகளின் அடிப்படையில் விவரிக்கப்படும் சம்பவங்கள் இந்த நூலுக்கு வலிமை சேர்க்கிறது.

தனது பலம்- பலவீனம்; எடுத்த தவறான முடிவுகள்-சரியான முடிவுகள்; குழப்பம்-தெளிவு ; தெரிந்தது- தெரியாதது என்று ஒவ்வொரு இக்கட்டான நேரத்திலும் சுய விமர்சனத்தின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகும் பாங்கு, சரியான தீர்வு என்று உறுதியான நிலையில், சமரசத்திற்கு உடன்படாத அவரது மனோதிடம் என்பவற்றிற்கு இந்த நூலில் ஏராளமான உதாரணங்களைப்பார்க்கலாம்.

AAP
Source: AAP

Recession என்ற பொருளாதார மந்த நிலை காரணமாக, பொருளாதார வளர்ச்சி தேக்கமுற்றிருந்த நிலையிலேயே 2009 இல் அதிபர் பொறுப்பை Obama ஏற்றார். அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் சிக்கிக்கொண்டு வெளியேறமுடியாத நிலையில் இராணுவச்செலவினங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டிருந்த கால கட்டம். வேலையற்றோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிப்பு. இந்த சூழ்நிலையில்தான் global financial crisis என்ற நிதி நெருக்கடி ஏற்பட்டு உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நின்றன.

அமெரிக்காவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மோட்டார் கார் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் நிலைகுலைந்து போனதுடன் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்தார்கள்; வீடுகளை இழந்தார்கள்; வீடுகளின் பெறுமதி அதிரடியாக வீழ்ச்சியடைந்ததால் பலர் வீட்டுக்கான கடன்களைக் கட்டாமல் வெளியேற, sub prime lending என்ற அடிப்படையில் வீட்டுக்கடன்களை வழங்கிய வங்கிகளும் நிதிநிறுவனங்களும் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

நிலைமையைச் சீர் செய்ய பல கோடி டாலர்களை அரசு economic stimulus என்ற அடிப்படையில் செலவிடவேண்டியிருந்தபோதும் 1.3 trillion அளவிலான இந்த நிதியை Congress அங்கீகரிப்பதில் எதிர்க்கட்சியுடன் பெரும் இழுபறிநிலை ஏற்பட்டது. இந்த நிதியை செலவழிக்க அங்கீகாரம் பெற்றது Obama வின் பெருஞ்சாதனையாகப்பார்க்கப்பட்டது.

முதல் நான்காண்டு காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட ஏனைய பிரதான சட்டமூலங்கள் என்று பார்க்கும்போது, healthcare என்ற நலக்காப்புறுதி தொடர்பான சட்டமூலம், மற்றும், நிதிநிறுவனங்களின் செயல்பாடுகளில் மாற்றம் செய்வது தொடர்பான சட்டமூலம் என்பவை பிரதானமானவை. இந்த சட்டமூலங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளளப்பட்ட நாள் தொடக்கம் சட்டமாகும் வரைக்கான இடைக்காலப்பகுதியில் இடம்பெற்ற பிரதான நெளிவு சுளிவுகள் எல்லாமே விவரிக்கப்பட்டுள்ளன. சில வேளைகளில் இந்த அளவு (detail) விளக்கம் தேவைதானா என்ற கேள்வி எழுந்தாலும் அதை முழுமையாக வாசகனுக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற அவரது நோக்கத்தில் பழுதில்லை.

President Barack Obama stops to greets children from Al-Rahmah school and other guests during his visit to the Islamic Society of Baltimore, Wednesday, Feb. 3, 2016, in Baltimore, Md.
Source: AAP

அதேபோல உதாரணத்திற்கு ஈரான் பிரச்சனையை எடுத்துக்கொண்டால், அந்த பிரச்சனையின் வரலாற்றை முதலில் சொல்கிறார்; அதன் பின் பிரச்சனை என்ன என்பதை விளக்குகிறார்; இந்த பிரச்சனையைத்தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பலவேறு கருத்துக்களையும் விளக்குகிறார்; இறுதியாக தான் தெரிவு செய்த அணுகுமுறை ஏன் சரியானது என்பதற்கான வாதத்தை முன் வைக்கிறார். இதனால் அவரது முதல் இரண்டு ஆண்டு பதவிக்கால அரசியல் அனுபவங்கள் மட்டும் 700 பக்கங்களுக்கு விரிவடைகிறது. அரசியலில் பெரும் ஆர்வமில்லாதவர்களுக்கு இது சற்றே அலுப்பை ஏற்படுத்தக்கூடும்.

லிபியாவில் கடாபியின் இராணுவம் Benghazi நகரத்தை நிர்மூலமாக்கும் நோக்கில் முன்னேறிய போது ஐரோப்பிய யூனியனின் அனுமதியோடு, லிபிய இராணுவத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தியதை விளக்கமாக விவரிக்கும் Obama, அந்த குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை சொல்லாமலே செல்கிறார்.

அதேபோல கடாபி வீழ்த்தப்பட்டதைத்தொடர்ந்து ஏற்பட்ட Arab spring என்று அழைக்கப்டும் அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தின்போது எகிப்தின் தலைவர் Hosni Mubarak பதவியிலிருந்து விலகியது தொடர்பான விளக்கங்களின் போது, அமெரிக்கா Muslim brotherhood இற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததை நியாயப்படுத்தும் Obama, Bahrain , Morocco, Tunisia போன்ற நாடுகளில் ஏற்பட்ட பொதுமக்களின் கிளர்ச்சிகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதைக் கோடிட்டுக்காட்ட தவறிவிடுகிறார்.

இதை ஒரு வரலாற்று நூல் என்ற அடிப்படையில் பார்க்கிறபோது அரசியல் சமூக பொருளாதார மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் பெருமளவில் பயன்படக்கூடிய தகவல்கள் மட்டுமல்ல அரசியல் இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகளையும் இந்த நூலில் விவரிக்கிறார் Obama.

ஒரு சட்டமூலத்தை சட்டமாக்க எடுக்கவேண்டிய பிரயத்தனங்கள், Obama வின்  சட்டமூலம் என்ற ஒரே காரணத்திற்காக சட்டமூலத்தைப்  பார்க்காமல் ஆராயாமல் எதிராக வாக்களிக்கும் எதிர்க்கட்சி, அரசியல் லாபத்திற்காக தனக்கு ஆதரவான பொதுசன ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் என்று, அரச இயந்திரத்தின் inner circle என்ற உள் வட்டாரம் நடத்தும் அரசியல் பேரங்கள் சுவாரஸ்யமாக இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக நூலில் ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை, இக்கட்டான சூழ்நிலைகளின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது.

President Barack Obama is pictured kissing first lady Michelle Obama on January 20, 2017.
President Barack Obama is pictured kissing first lady Michelle Obama on January 20, 2017. Source: AAP

ஒவ்வொரு நாட்டிற்கும் விஜயம் செய்யும்போதும், அல்லது அந்த நாடுகுறித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டி ஏற்படும்போதும் அந்த நாடுபற்றிய சுருக்கமான வரலாற்றை, அந்த நாட்டின் அப்போதைய தலைவரைப்பற்றிய பின்புலத்தை அவர் முன்வைப்பது பொதுவாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Obama சாதித்து என்ன என்ற கேள்வியை பலரும் கேட்க க்கூடும். இதற்கு அவரே, தனக்கும் தன் மனைவி Michelle இற்கும் இடையேயான ஒரு உரையாடலின் மூலம் விளக்குகிறார்.

Michelle: Barack, நீ ஏன் president (அதிபர்) ஆக வேண்டும்? Obama: நான் எனது வலது கையை உயர்த்தி, அதிபராக சத்யபிரமாணம் செய்யும்போது, இந்த உலகமே அமெரிக்காவை வேறு கோணத்தில் இருந்து பார்க்கும். இந்த உலகத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லோரும், அவர்கள் கறுப்பினத்தவர், ஸ்பானியர், எந்த வகைக்குள்ளும் வராதவர்கள் எல்லோரும் தங்களைத்தாமே வேறுவிதமாகப் பார்க்கத்தலைப்படுவார்கள். அவர்களது வானம் விரிவடையும்; அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஒன்றுக்காகவே எனது முயற்சி பெறுமதியானது என்று கருதுகிறேன் “

எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நனவாகும் பூமி, ‘Promised land’ மிகச்சிறந்த அரசியல் இலக்கியம்( political literature )என்பதில் சந்தேகமில்லை.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now