முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும், புகழ்பெற்ற ஒலிபரப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் ஜப்பார் முதன்முதலாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையைச் செய்தார்.
1982-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் வர்ணனையைச் செவிமடுத்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய அப்துல் ஜப்பார் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்காகவும் வர்ணனையாளராக பணிபுரிந்திருக்கிறார்.
அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து சந்தித்திருந்தார். அவருடனான அனுபவத்தை 'அழைத்தார் பிரபாகரன்' எனும் நூலில் அப்துல் ஜப்பார் எழுதி வெளியிட்டிருந்தார்.
இதுதவிர காற்று வெளியினிலே, இறைத்தூதர் முஹம்மது(மொழிபெயர்ப்பு)ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.