சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு புறப்பட்ட Tigerair பயணிகள் விமானம் நடுவானில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக சிட்னிக்கு திரும்பியிருக்கிறது.
நடுவானில் ஏற்பட்ட அச்சுறுத்தல் என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாதபோதும், விமானத்தில் குண்டுவைக்கப்பட்டுள்ளதாக விமானத்தின் கழிவறையில் எழுதி வைக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் கடதாசியொன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு சிட்னியிலிருந்து மெல்பேர்ன் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணிநேரமாக நடுவானில் பயணம் செய்த விமானம் மெல்பேர்னுக்கு சென்றடையாமல் மீண்டும் சிட்னிக்கு திரும்பியதால் பயணிகள் கடும் சீற்றமடைந்தனர்.
விமானம் தரையிறங்கும்போது உடனடியாக பாதுகாப்பு துறையினரின் வாகனங்கள் சூழ்ந்துகொண்டு பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால், பயணிகளுக்கு எந்தக்காரணமும் கூறப்படவில்லை. இதனால் பயணிகள் மேலும் கோபமடைந்துள்ளனர்.
அசௌகரியத்துக்கு மன்னிப்புக்கோரியுள்ள விமானசேவை, பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காரணம் தெரிவித்துள்ளது.
Share
