ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டிருந்தபோது வாகனமோட்டி, இலங்கை மாணவி ஒருவரை மோதிக்கொலை செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற 37 வயது மெல்பேர்ன் நபர் நேற்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இவருக்குரிய தண்டனை அறிவிப்புக்கு முன்னரான அடுத்த நீதிமன்ற அமர்வு ஜூலை மாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மெல்பேர்ன் Clayton பகுதியில் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி இரவு சிக்னலில் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கெரிந்துகொண்டிருக்கும்போது வீதியை கடந்துகொண்டிருந்த நிஷாலி பெரேராவை அந்தப்பகுதியால் வேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் மோதி தூக்கி எறிந்திருக்கிறது. சுமார் 60 மீற்றர்களுக்கு தூக்கியெறியப்பட்ட நிஷாலி பெரேரா தலையில் ஏற்பட்ட பலத்த அடிகாரணமாக அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
நிஷாலி பெரேராவை வாகனத்தினால் மோதிக்கொன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட Shane Cochrane என்ற 37 வயது நபர் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார். "வீதியில் வாகனத்தை ஓட்டிவந்துகொண்டிருந்தபோது, சடுதியாக அந்தச்சம்பவம் நடைபெற்றுவிட்டது. அடுத்த நிமிடம் நான் யாரையோ மோதிவிட்டேன் என்பது தெரிந்தது. அந்தப்பெண்ணை ஒரு கணம் நான் காணக்கூட இல்லை" - என்று Shane Cochrane பொலீஸாருக்கு கூறியிருக்கிறார்.
நிஷாலி பெரேரா விபத்துக்குள்ளானபோது அந்த வழியால் சென்ற அம்புலன்ஸை நிறுத்தி உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் அவருக்கு நாடித்துடிப்போ மூச்சோ இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாகனத்தினால் மோதியபின் Shane Cochrane தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரும் அவருடன் பயணம் செய்த பெண்ணும் சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களுக்கு பின்னர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டனர். குற்றத்தை இழைத்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் குறிப்பிட்ட பெண்ணும் தற்போது வழக்கினை எதிர்கொள்கிறார்.
நீதிமன்ற விசாரணைகள் தொடரும். அதன் பின்னர் தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மெல்பேர்ன் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறிலங்காவிலிருந்து வந்த நிஷாலி பெரேராவின் தாயார் அமர்வில் கலந்துகொண்டார்.
