'மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலிய அரசின் அகதிக்கொள்கையால் சீரழிக்கப்படுகிறார்கள். நீண்ட காலத்தனிமைப்படுத்தலினால் அங்கு அந்த அகதிகள் அனுபவித்துவருவது மிகப்பெரியதொரு மனிதப்பேரழிவு' என்று மனுஸ் தீவின் முன்னாள் அகதி Abdul Aziz Muhamat ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வில் கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு சூடானிலிருந்து வெளியேறி படகுப்பயணத்தை மேற்கொண்டு கிறிஸ்மஸ் தீவிற்கு வந்த Abdul Aziz Muhamat மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தொடர்ந்தும் அகதிகளுக்காக குரல் கொடுத்துவந்தார்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக மனுஸ் - நவுறு அகதிகள் குறித்து Abdul Aziz Muhamat ஒலி வழியாக வெளிக்கொண்டுவந்த பதிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
அகதிகளின் உரிமைக்காக குரல் கொடுத்த Abdul Aziz Muhamat 2019 ஆம் ஆண்டுக்குரிய Martin Ennals விருதுக்குரியவராக தெரிவு செய்யப்பட்டார். Martin Ennals Laureate உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சுவிட்ஸர்லாந்தின் உயரிய விருதாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதினை பெற்றுக்கொள்வதற்கு Abdul Aziz Muhamat மனுஸ் தீவிலிருந்து சுவிஸ் சென்றபோது அந்த நாட்டினால் அரசியல் தஞ்சமளிக்கப்பட்டார்.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் அவையின் 41 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட Abdul Aziz Muhamat, மனுஸ் தீவிலிருந்து தான் விடுதலையாகி வந்திருப்பினும் அங்கு மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கொடிய துயரங்களை அனுபவித்துவருகிறார்கள் என்றும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெரும் வதைகளை அனுபவித்துவருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் முதல் நூறு அகதிகள் மனுஸ் தீவில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றால் அங்குள்ள நிலமையை எண்ணிப்பாருங்கள் என்ற அவரது பேச்சு மனித உரிமைகள் பேரவையில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அகதிகள் பிரச்சினை வெறும் இலக்கங்கள் மாத்திரமே என்றும் Abdul Aziz Muhamat போன்றவர்கள் நேரடியாக வந்து தாங்கள் அனுபவித்த துயரங்களை சொல்லும்போது பிரச்சினைகளின் உணர்வோட்டத்தை நேரடியாக உணரக்கூடியதாக உள்ளது என்றும் அவையில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Share
