ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடிமக்களாக வரவிரும்புகின்றவர்கள் ஆஸ்திரேலியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் regional area-நகரம் அல்லாத பகுதியில் குறைந்தது ஐந்து வருடங்கள் வசிக்கவேண்டும் என்ற நிபந்தனை ஆஸ்திரேலிய அரசு புதிதாக கொண்டுவரவுள்ள குடிவரவுக்கொள்கை மாற்றத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தநிலையில் பிரதமர் Scott Morrison இது தொடர்பில் கோடி காட்டியுள்ளார்.
ஆண்டொன்றுக்கு 1,90,000 பேர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும்நிலையில் அவர்கள் எங்கே வாழ வேண்டுமென்பதை மாநில அரசுகளே தீர்மானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
ஸ்கை நியூஸ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தேசிய குடிவரவுக்கொள்கையை மத்திய அரசாங்கம் தீர்மானித்தாலும் மாநில மட்டத்தில் புதிய குடிவரவாளர்களை எவ்வாறு கையாளுவது மற்றும் அவர்களை எங்கே குடியமர்த்துவது போன்ற விடயங்களை மாநில அரசுகள் முடிவெடுக்கவேண்டும். இந்த விவகாரங்களில் மாநில அரசுகள் தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயற்படவேண்டும் என்று பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு தேவையான வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் உட்கட்டுமானத்துறைகளை மாநில அரசுகளே முடிவு செய்கின்றன. ஆகவே, மாநிலங்களுக்கு வருகின்ற புதிய குடிவரவாளர்களை மாநிலத்திலுள்ள வசதிகளுக்கு ஏற்ப அந்தந்த அரசுகளே கையாளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
