ஆஸ்திரேலிய உள்ளூர் விமானங்களில் பயணிப்பவர்களது விவரங்கள் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட விமானசேவைகளினால் சேகரிக்கப்பட்டு சுகாதார சேவையினரிடம் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அறிவித்துள்ளார்.
நோய் தொற்று ஏற்பட்டுவருகின்ற தற்போதைய வேளையில் சுகாதார சேவையினருக்கு இவ்வாறு தரவுகளை வழங்கி உதவுவது வைரஸ் பரவலை வேகமாக கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் விமானங்களில் பயணிப்பவர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொடர்பிலக்கம், அவர் பயணிக்கும் இடம் மற்றும் தங்கவுள்ள முகவரி ஆகிய விவரங்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் விமானசேவைகளினால் சேகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விமானசேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் ஏற்கனவே இந்த நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளன.
ஆனால், விமானங்களில் பயணிப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஏற்கனவே போதுமானளவு வழங்கப்படும் படிமுறை, நடைமுறையிலுள்ளபோது தற்போது அறிமுகமாகும் இந்த புதிய அறிவிப்பு தேவையானதா என்ற கேள்வி எழுவதாகவும், பெற்றுக்கொள்ளப்படும் தனிப்பட்டவர்களின் விவரங்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என்பதை அரசு மட்டத்தில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்கள் எடுத்துக்காட்டியுள்ளநிலையில் தற்போதைய நடைமுறை பயணிகளுக்கு நிச்சயம் அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றும் Australian Privacy Foundation அதிகாரி David Vaile கூறியுள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
