The Australian நிறுவனம் இறுதியாக மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம் கூட்டணி அரசுக்கும் பிரதமர் Malcolm Turnbull-க்கும் மக்கள் மத்தியிலான ஆதரவு பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல்களில் கூட்டணி அரசு பயங்கர தோல்வியை சந்தித்ததன் பின்னணியில் - கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நடத்திய முதலாவது கருத்துக்கணிப்பிலேயே இந்த விவரம் வெளிவந்திருக்கிறது.
லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுக்கான மக்கள் ஆதரவு லேபர் கட்சியுடன் ஒப்பிடும்போது 49-51 என்ற விகிதத்தில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்ற அதேவேளையில், கூட்டணி அரசுக்கான மக்கள் ஆதரவும் 39 வீதத்திலிருந்து இரண்டு வீதங்களால் சரிவடைந்திருக்கிறது.
லேபர் கட்சிக்கான மக்கள் ஆதரவு 35 வீதத்திலிருந்து ஒரு சதவீதம்தான் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
கடந்த கருத்துக்கணிப்பைவிட எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten-க்கான மக்கள் ஆதரவு இம்முறை அதிகரித்திருப்பது கருத்துக்கணிப்பில் வெளிவந்துள்ள அடுத்த முக்கிய செய்தியாகும்.
மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Malcolm Turnbull 44-32 என முன்னிலை வகித்தாலும் கடந்த கருத்துக்கணிப்பை விடவும் Turnbull-க்கான ஆதரவு 4 வீதத்தினால் குறைவடைந்துள்ள அதேநேரம் Bill Shorten-க்கான ஆதரவு 3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதேவேளையில், அதி தீவிர வலதுசாரிக்கட்சியான One Nation-க்கான மக்கள் ஆதரவு ஏழு சதவீதத்திலிருந்து ஒன்பது சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
