நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்ற செய்தியை பிரதமர் Malcolm Turnbull உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் செயற்பாடு ஒரு தடவை மாத்திரமே அதாவது one-off ஆக இடம்பெறவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகளில் எத்தனை பேர் எப்போது அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடாத பிரதமர் Malcolm Turnbull, அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனக் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான இவ்வொப்பந்தம் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்களுக்குப் பொருந்தாது என்றும் குறித்த ஒப்பந்தம் ஐ.நா அகதிகள் அமைப்பினால் நிர்வகிக்கப்படுமெனவும் குறிப்பிட்ட பிரதமர், இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா வரும் அமெரிக்க அதிகாரிகள் இதன் அடுத்தகட்டப் பணிகள் தொடர்பில் ஆராய்வர் எனக் கூறினார்.
இதேவேளை அமெரிக்காவில் குடியமர மறுப்பவர்களுக்கென 20 வருட நவுறு விசா பெறுவதற்கான பேச்சுக்கள் நவுறு அரசுடன் மேற்கொள்ளப்படுவதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
அத்துடன் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமெனவும் ஏற்கனவே 650 பேர் நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Share
