மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் உள்ள அகதிகள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படக்கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை மாற்றியமைப்பதில் ஆட்சிபீடமேறியுள்ள லிபரல் கூட்டணி அரசு தீவிரமாக செயற்படவுள்ளதாக அதன் கருவூலக்காப்பாளர் -Treasurer Josh Frydenberg தெரிவித்துள்ளார்.
Medevac bill எனப்படுகின்ற இந்த சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மனுஸ் - நவுறு தீவுகளில் உள்ள அகதிகள் தங்களது மருத்துவ காரணங்களை காண்பித்து ஆஸ்திரேலியாவுக்கு வரப்போகிறார்கள் என்று அச்சம் தெரிவித்த லிபரல் அரசு, தனது கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே இழுத்து மூடிய கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமை மீளத்திறந்தது. மருத்துவ காரணங்களுக்காக கொண்டுவரப்படும் அகதிகளை அந்த முகாமில் தங்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்மஸ்தீவு முகாமை மீண்டும் மூடுவதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருவூலக்காப்பாளர் Josh Frydenberg கூறும்போது - Medevac சட்டத்தினை களைவதென்பது லிபரல் அரசின் கொள்கைகளில் ஒன்று. அந்தச்சட்டம் நடைமுறையிலிருக்கும்வரையில் கிறிஸ்மஸ் தீவு அகதிமுகாமை திறந்துவைத்திருக்கவேண்டிய தேவை இருக்கிறது. இப்போதைக்கு அந்த முகாமை திறந்து வைத்திருப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சிகள் குறித்து அரசு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Medevac சட்டத்தினை நீக்குவதற்கு செனட்டில் போதிய ஆதரவு புதிய அரசிலும் கிடைக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த அரசிலும் இதே நிலைதான் நிலவியது. லேபரும் கிறீன்ஸ் கட்சியும் ஆதரவளித்துக்கொண்டதன் ஊடாகவே medevac bill கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
