ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தற்போது பாப்புவா நியூகினி தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை சந்திப்பதற்காக சென்ற ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனெட்டர் Nick McKim பாப்புவா நியூகினி தீவு அரச அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அவரது கடவுச்சீட்டை வாங்கிய அதிகாரிகள் அவரை நாட்டைவிட்டு வெளியேறக்கோரும் உத்தியோகபூர்வ கடிதத்துடன் கடவுச்சீட்டை மீளக்கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு முதல் அத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளின் ஆறாவது ஆண்டு நிறைவுநாளை முன்னிட்டு அவர்களை சந்திப்பதற்காக சென்றபோது தனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாக செனெட்டர் Nick McKim அங்கிருந்து வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
பாப்புவா நியூகினி தீவுக்கு செல்வதற்காக தனக்கு 12 மாத விசா உள்ளது என்றும் தனது பயணம் மரியாதை நிமித்தமானதாக அமைந்துள்ளபோதிலும் மிரட்டல்தொனியிலும் அச்சுறுத்தும்வகையிலும் தன்னை அங்கிருந்து வெளியேற்றியமையானது மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அகதிகளின் நலனுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் தான் குரல் கொடுப்பதை தடுப்பதற்கு யார் முயற்சிசெய்தாலும் தான் தொடர்ந்தும் போராடப்போவதாக Nick McKim கூறியுள்ளார்.
