அகதிகளை தடுப்புமுகாம்களுக்கு கொண்டு செல்வதும் மற்றும் நாடுகடத்துவது போன்ற போக்குவரத்து செயற்பாடுகளுக்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த வருடம் மாத்திரம் 78 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளதாக அறியவந்திருக்கிறது.
நாட்டிலேற்பட்டுள்ள வரட்சிக்கு 17 மில்லியன் டொலர் நிதியையும் ஏனைய மக்கள் நிவாரணப்பணிகளுக்கு கணக்கு பார்த்து நிதியை ஒதுக்கீடு செய்யும் அரசாங்கம், அகதிகள் விவகாரத்தில் கடைப்பிடித்துவரும் இறுக்கமான கொள்கையால் நாட்டு மக்களின் பெருந்தொகையான பணத்தை வாரி இறைக்கிறது என்று ஊடகங்கள் விமர்சித்திருக்கின்றன.
அகதிகளின் போக்குவரத்துக்காக இதற்கு முந்திய வருடம் செலவு செய்யப்பட்ட 97 மில்லியன் டொலர் நிதியுடன் ஒப்பிடுகின்றபோது கடந்த வருட செலவீனம் குறைந்துள்ளபோதும் உள்துறை அமைச்சு தொடர்ந்துவருகின்ற கடும்போக்கினால் பொதுமக்களின் பணம்தான் விரயப்படுத்தப்படுவதாக அகதிகள் நல அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.
தனியார் விமானங்களுக்கு மாத்திரம் 3 மில்லியன் டொலர் பணம் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் மிகுதி பணம் உள்நாட்டிலுள்ள தடுப்புமுகாம்களுக்கு இடையிலும் மனுஸ் மற்றும் நவுறு தீவு முகாம்களிலிருந்து அகதிகளை ஏற்றி இறக்குவதற்கான போக்குவரத்துக்கும் செலவிடப்பபட்டிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Share
