அகதிகள் என்ற அங்கீகாரத்துக்கும் வதிவிட உரிமைக்கான நீதிமன்ற பதில்களுக்கும் காத்திருக்கும் காலப்பகுதியில் தற்காலிக விசாவில் உள்ளவர்களுக்கான நிதியுதவிகளை அரசு நிறுத்தக்கூடாது என்று ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையகம் வழங்கிய யோசனையை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
குறிப்பிட்ட விசா வகைகளின் கீழ் உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அகதிகளின் தனித்தனியான வழக்குகளை பரிசீலித்ததின் அடிப்படையில் அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இது என்றும் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதற்கு தவறுகின்றவர்கள் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள் கடந்த வருடம் மே மாதம் முதல் பெருமளவில் குறைக்கப்பட்டது. வதிவிட உரிமைக்கான உரிய பதிலுமின்றி எதிர்காலம் குறித்த காத்திரமான பதிலும் இல்லாமல் ஏற்கனவே மன உளைச்சலை எதிர்நோக்கியிருக்கும் இந்த அகதிகளுக்கு வாழ்வாதார உதவியையும் நிறுத்துவதென்பது கொடுமையானது என்றும், இது தொடர்பில் அரசு தனது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
