நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டமுன்வடிவுக்கு நாடாளுமன்றின் அனுமதி கிடைத்துள்ளது.
இரு மருத்துவர்களின் பரிந்துரை அல்லது மருத்துவ குழுவின் பரிந்துரை அல்லது அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோரை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்ற ரீதியில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லேபர் மற்றும் கிரீன்ஸ் கட்சிகளின் ஆதரவுடன் செனட் அவையில் 34-36 என்ற அடிப்படையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நவுறு மற்றும் மனுஸ் அகதிகள் போலி மருத்துவ காரணங்களைக்காட்டி ஆஸ்திரேலியாவுக்குள் வர முற்படுவார்கள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இப்புதிய சட்டம் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ஆட்கடத்தல்காரர்கள் இதைக் காரணமாக வைத்து தமது வியாபாரத்தை மீள ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் படகுகள் மீண்டும் ஆஸ்திரேலியா நோக்கி வரும் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள எதிர்கட்சித் தலைவர் Bill Shorten இப்புதிய சட்டமானது ஏற்கனவே நவுறு மற்றும் மனுஸில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
