SKIP TO MAIN CONTENT

அகதிகளின் ஆறு வருட அவலத்தை நினைவேந்தும் ஆர்ப்பாட்டங்கள்!!

Refugees on Manus Island
Source: Supplied

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்த அகதிகளை மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் கொண்டுபோய் தடுத்துவைப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துக்கொண்ட ஆறு வருட நிறைவை நினைவூட்டும் வகையில் ஆஸ்திரேலிய நகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி அப்போதைய பிரதமர் Kevin Rudd தலைமையிலான அரசு மேற்கொண்ட முடிவின் பிரகாரம் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வந்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளுக்கு கொண்டுசென்று முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டார்கள்.

அந்த தடுப்புமுகாம்கள் சட்டவிரோதமானவை என்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல் - சட்ட - இராஜதந்திர அழுத்தங்களின் பின்னர், குறிப்பிட்ட அகதிகள், முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தங்கவைக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர், மூன்றாவது நாடொன்றில் அவர்களை குடியமர்த்தலாம் என்று ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முயற்சிகளையடுத்து  அமெரிக்க அரசுடன் மேற்கொண்ட Turnbull- Obama  ஒப்பந்தத்தின் கீழ் 1250 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுவருகின்றனர். இதுவரை 580 பேர் அங்கு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் தகவல்களின்படி, தற்போது பாப்புவா நியூகினி தீவில் 457 அகதிகள் உள்ளார்கள் என்றும் அவர்களில் 117 பேர் அகதிகளாக அங்கீகரிக்கப்படாதவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தத்தீவில் ஆறு வருடங்களாக தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் உடல் - உள நிலைகள் பாரியளவில் மோசமடைந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுக்கு தாங்களே ஊறு விளைவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்குள்ள பலர் தற்கொலைக்கு முயன்றுள்ள அதேநேரம் 9 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அகதிகளின் நிலை பயங்கரமாகிக்கொண்டு செல்வதாக பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சுயாதீன அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளபோதும், அவர்களை எக்காரணம்கொண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக உள்ளது.

அரசின் இச்செயல் மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ள அகதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வார இறுதியில் "six years too long" என்ற  பெயரில் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now