நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்று பிரதமர் Malcolm Turnbull இன்று அறிவித்தார்.
இவ்வாறு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் நடவடிக்கை என்பது ஒரு தடவை மாத்திரமே அதாவது one-off ஆக மட்டுமே இடம்பெறவுள்ளதாக பிரதமர் Turnbull தெரிவித்தார். மேலும், நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகளில் எத்தனை பேர் எப்போது அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடாத பிரதமர் Turnbull, குடியமர்த்தப்படுகின்றவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள - குறிப்பாக குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென்று குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்கா- ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தம் அகதிகள் என்று இனங்காணப்படாதவர்களுக்குப் பொருந்தாது என்றும், தற்போதைய ஒப்பந்தம் ஐ.நா அகதிகள் அமைப்பான U-N-H-C-R மூலம் நிர்வகிக்கப்படும் என்றும் ட பிரதமர் Malcolm Turnbull கூறினார். இன்னும் சில தினங்களில் அமெரிக்க அதிகாரிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து இதன் அடுத்தகட்டப் பணிகள் தொடர்பில் ஆராய்வர் என்றும் பிரதமர் Malcolm Turnbull கூறினார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்று அரசு அறிவித்திருப்பதை எதிர்கட்சித் தலைவர் Bill Shorten வரவேற்றுள்ளார். ஆனாலும் அமெரிக்க அதிபராக Donald Trump பொறுப்பேற்கவிருக்கும் பின்னணியில் இந்த ஆஸ்திரேலிய-அமெரிக்க ஒப்பந்தம் பாதிக்கபடாதா? என்று Bill Shorten கேள்வி எழுப்பினார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அமெரிக்க – ஆஸ்திரேலிய திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்றபோதிலும், அப்படி குடியமர்த்தப்பட மறுக்கின்றவர்கள் தொடர்ந்து நவுரு தீவில் தங்கவைக்கபடுவர் என்றும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.
அப்படியான அகதிகள் தொடர்ந்து நவ்ரு தீவில் தங்கியிருக்க 20 ஆண்டுகால விசாவை அவர்களுக்கு வழங்குவது தொடர்பாக நவுறு அரசுடன் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் Dutton கூறினார்.
மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமெனவும் ஏற்கனவே 650 பேர் அப்படி நாடு திரும்பிவிட்டதாகவும் அமைச்சர் Dutton குறிப்பிட்டார். மேலும், சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஆஸ்திரேலியா நோக்கி வரும் படகுகள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்படும் என்பதே அரசின் கொள்கை என்றார் அமைச்சர் Dutton.
அமெரிக்க – ஆஸ்திரேலிய திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட மறுக்கின்ற அகதிகள் தொடர்ந்து நவுரு தீவில் தங்கவைக்கபடுவர் என்றும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு அறிவித்திருப்பதை Greens கட்சி விமர்சித்துள்ளது.
அகதிகளை கட்டாயப்படுத்தி இன்னொரு நாட்டுக்கு அனுப்புவது நெறியற்ற செயல் என்றும், அகதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் Greens கட்சியின் அறிவிப்பாளர் Nick McKim கூறினார்.
அகதிகள் என்று இனங்காணப்படாதவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்று அறிவித்திருக்கும் அரசு ஆஸ்திரேலிய – அமெரிக்க ஒப்பந்தத்திலும் இவர்களுக்கு எந்தவித தீர்வையும் தரவில்லை என்று Human Rights Law Centreஇன் Legal Advocacy இயக்குனர் Daniel Webb அரசை குறை கூறினார். அகதிகள் என்று அடையாளம் காணப்படாத நிலையில் நவுறு மற்றும் மனுஸ் தீவில் வாழ்ந்துவரும் சுமார் 500 பேர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் சுமார் 320 பேர் என்று இவர்களின் கதி என்ன என்று Daniel Webb கேள்வி எழுப்பினார்.
Share
