SKIP TO MAIN CONTENT

அகதிகள் தொடர்பான 'இரகசிய' ஆய்வறிக்கையை வெளியிடுமாறு அரசுக்கு வலியுறுத்தல்!

Prime Minister Scott Morrison and David Coleman, Minister for Immigration, Citizenship and Multicultural Affairs during press conference in Canberra (20/03/19)
Prime Minister Scott Morrison and David Coleman, Minister for Immigration, Citizenship and Multicultural Affairs Source: AAP Image/Andrew Taylor

1 min read

Published


Skip to article content

மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலிய அரசினால் உள்வாங்கப்படும் அகதிகளை குடியமர்த்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது என விசாரணை அறிக்கையொன்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் மீள்குடியமர்வு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஸ்கொட் மொறிஸனால் கடந்த வருடம் அமைக்கப்பட்ட குழுவே அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

மொறிஸன் அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான பல்வேறு விடயங்களில் ஆலோசனைகளை வழங்கிவருகின்ற பேராசிரியர் Peter Shergold தலைமையிலான குழுவினர் இந்த அறிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் அரசிடம் சமர்ப்பித்துள்ளபோதிலும், இந்த அறிக்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் தற்போதைய அகதிகள் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை விமர்சிக்கும் காரணத்தினால் இதனை வெளியிடாமல் மொறிஸன் அரசு பின்னடித்துவருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் -அகதிகளை சமூகத்தில் இணைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு தற்போது ஒதுக்கப்படுகின்ற நிதி போதாது. இவ்வாறான அகதிகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் குறிப்பிட்ட பிரதேசங்களில்தான் வசிப்பதால் பிராந்தியங்களை மையமாகக்கொண்டு உதவிகளை வழங்கவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு ஒவ்வொருவருடமும் கோட்டா அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகள் இங்கு வந்து உடனடியாக வேலை செய்யக்கூடியவர்களாக உள்ளார்களாக என்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்படாமல் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் அந்த தெரிவு இடம்பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்குள் உள்வாங்கப்படும் அகதிகளில் பெருமளவானோர் சிட்னியில் Fairfield, Liverpool பிரதேங்களிலும் மெல்பேர்னில் Hume, Greater Dandenong பிரதேசங்களிலும்தான் குடியமர்வதை காணக்கூடியதாக உள்ளது. ஆக, அந்த கவுன்ஸில்களின் ஊடாக கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், ஆங்கிலமொழி பயிற்சி போன்றவற்றை வழங்கலாம்- என்று Shergold அறிக்கை பரிந்துரை செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த அறிக்கையை இரகசியமாக பேணாமல் அரசு உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எதிர்கட்சியான லேபர்கட்சி வலியுறுத்தியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now