நவுறு - மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை (medevac bill) நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதத்துக்கு எடுத்து தோற்கடிப்பதற்கு திட்டமிட்டுள்ள லிபரல் கூட்டணியின் யோசனைக்கு எதிராக லேபர் போர்க்கொடி தூக்கியுள்ளது.
லிபரல் கூட்டணியின் இத்திட்டம் பலிக்காது என லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்கள் குறித்த பேச்சாளர் Kristina Keneally கூறியுள்ளார்.
நவுறு - மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கு நாடாளுமன்றத்துக்கு கடந்த பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட சிறப்பு சட்ட மூலம், லேபர் மற்றும் ஏனைய எதிர்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மூலமானது அமைச்சு அதிகாரங்களை மேவும் வகையில் காணப்படுவதாகவும் இந்த சட்ட மூலத்தின் துணையுடன் நவுறு - மனுஸ் தீவுகளிலுள்ள அச்சுறுத்தல் மிக்க அகதிகளும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்துவிடக்கூடிய அபாயம் உண்டெனவும் உள்துறை அமைச்சர் Peter Dutton தொடர்ந்து கூறிவந்தார்.கடந்த மே 18 தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு, குறிப்பிட்ட சட்டத்தினை களைவதற்கு திட்டமிட்டு வருவதாக பகிரங்கமாகவே அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கி செவ்வியில் - நவுறு - மனுஸ் தீவுகளிலிருந்து மேற்படி சட்டத்தின் கீழ் - மருத்துவ காரணங்களுக்காக - முப்பதுக்கும் மேற்பட்ட அகதிகள் இதுவரை ஆஸ்திரேலியா வந்திருப்பதாக கூறியுள்ள Dutton இவ்வாறு அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு ஏதுவாகவுள்ள இந்த சட்டத்ததை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றுமுழுதாகவே கைவிடுவதற்கு லேபர் கட்சியுடன் கலந்தாலோசிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து குறித்து கூறியுள்ள Kristina Keneally என்ன காரணத்துக்காக இந்த சட்டம் களையப்படவேண்டும் என்று Dutton நாடாளுமன்றில் கூறவேண்டும். ஆனால், லேபர் இந்த சட்டத்தை ஆதரிப்பது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Share
