ஆஸ்திரேலியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களில், பயங்கரவாதம்,கொலை மற்றும் தவறான நடத்தை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கே அனுப்பிவைக்கப்படுவார்கள் என பிரதமர் Scott Morrison இன்று அறிவிக்கவுள்ளார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அதுகுறித்த வாதபிரதிவாதங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் போலி மருத்துவ காரணங்களைக்காட்டி ஆஸ்திரேலியாவுக்குள் வர முற்படுவார்கள் என குற்றம்சாட்டிய அரசு, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீள ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவித்துவருகிறது.
இதையடுத்து நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு வராமல் கிறிஸ்மஸ் தீவுக்கு மட்டும் வரமுடியும் என உள்துறை அமைச்சர் Peter Dutton அறிவித்திருந்தார்.
ஆனால் அரசின் இவ்வறிவிப்பு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானநிலையில் பயங்கரவாதம், கொலை மற்றும் தவறான நடத்தை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மாத்திரம் மருத்துவதேவைக்காக கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என பிரதமர் இன்றையதினம் அறிவிக்கவுள்ளார்.
இதன்படி நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள ஏனையவர்கள் மருத்துவதேவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமான நிலப்பரப்பிற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பர்க்கப்படுகிறது.
அத்துடன் இன்றையதினம் கிறிஸ்மஸ் தீவுக்கு நேரில் விஜயம் செய்துள்ள பிரதமர் Scott Morrison அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பது உட்பட அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்வது இதுவே முதற்தடவையாகும்.
