SKIP TO MAIN CONTENT

அகதிகள் விடயத்தில் நியூசிலாந்தின் சலுகைக்கு பிரதமர் Turnbull பச்சைக்கொடி

File image: New Zealand's Prime Minister Jacinda Ardern and Australia's Prime Minister Malcolm Turnbull
File image: New Zealand's Prime Minister Jacinda Ardern and Australia's Prime Minister Malcolm Turnbull Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மனுஸ்தீவில் 400க்கும் மேற்பட்ட அகதிகள் தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற நியூசிலாந்து அரசின் சலுகையை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.

வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, பிரதமர் Malcolm Turnbull-உடனான தனது சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

எனினும் முன்னரைப்போலவே இச்சலுகையை மறுத்திருந்த பிரதமர், இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது எனவும், படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் எனவும் தமது முடிவினை நியாயப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இன்றையதினம் வானொலியொன்றுக்கு வழங்கிய பேட்டியில், அகதிகள் விடயத்தில் நியூசிலாந்தின் சலுகையை உடனடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் இது சாத்தியமே என பிரதமர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் பணி நிறைவடைந்ததும் இது குறித்து நியூசிலாந்துடன் பேச்சு நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த அக்டோபர் 31ம் திகதி, பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்து 400க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று 17வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

மனுஸ் முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்துபவர்கள், சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென, பப்புவா நியூகினி அரசு தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றது.

ஆனால் மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ளவர்கள் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now