நவுறு தீவிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படவுள்ள அகதியொருவரின் இடமாற்றத்தை தடுப்பதற்கு உள்துறை அமைச்சு விதித்த முட்டுக்கட்டையை நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.
நவுறு - மனுஸ் தீவு அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகைசெய்யும் விதமாக கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட medevac சட்டத்தின் பிரகாரம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவிருந்தது.
ஆனால், ஈராக்கினை சேர்ந்த இந்த அகதியின் இடமாற்றம் குறித்த விபரங்களை உள்துறை அமைச்சர் Peter Dutton-இடம் தெரிவிப்பதற்கு அவரது செயலர் மறுத்துவிட்டதாக அகதியின் சார்பில் வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்தார்கள்.
குறிப்பிட்ட அகதியின் மருத்துவ தகவல்களை சோதனை செய்த சிறப்பு மருத்துவர் குழு, அவருக்கு நவுறுவில் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை எனக்கூறி இடமாற்றத்துக்கு பரிந்துரை செய்திருந்தபோதும் அந்த பரிந்துரையை Peter Dutton-இடம் எடுத்துக்கூறுவதற்கு உள்துறை அமைச்சின் செயலர் நிராகரித்துவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட மருத்துவர்கள் குழு, ஈராக்கிய அகதியை நேரில் சந்தித்து சோதனைகளை மேற்கொள்ளாமலலேயே இடமாற்றத்துக்கான பரிந்துரையை செய்தார்கள் என்பதாலேயே குறித்த அகதியின் இடமாற்றம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என அமைச்சு செயலரின் வாதமாக முன்வைக்கப்பட்டது.
எனினும் அகதியை நேரில் பார்வையிடாமலேயே அவரது மருத்துவ குறிப்புக்களை ஆய்வு செய்து இடமாற்றத்துக்கு அனுமதி வழங்கலாம் என்ற மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குறிப்பிட்ட அகதியை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும்பொருட்டு உடனடியாக இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சர் Peter Dutton-இடம் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அமைச்சர் 72 மணித்தியாலங்களுக்குள் முடிவெடுக்கவேண்டுமென்பது கட்டாயமாகும்.
நவறு - மனுஸ் அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்துவருகின்ற இறுக்கமான நிலைப்பாடு தொடர்பில் வெளிவந்துள்ள மிக முக்கியமானதொரு தீர்ப்பாக இது கருதப்படுகிறது.
Share
