உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்த சவுதி யுவதி Rahaf Mohammed al Qunun-க்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்திருந்தநிலையில் அவர் கனடாவை சென்றடைந்துள்ளார்.
Rahaf Mohammed al Qunun உண்மையாகவே அகதி என்று உறுதிப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவரால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு அடைக்கலமளிப்பது குறித்து மிகச்சாதகமாக ஆஸ்திரேலியா பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சு கூறியிருந்தபோதும் இதற்கு முன்னதாகவே கனேடிய அரசு குறித்த யுவதிக்கு அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. இதையடுத்து Rahaf Mohammed al Qunun பாதுகாப்பாக கனடா சென்றடைந்துள்ளார்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம்கோரி வரும் வழியில் தாய்லாந்தில் வைத்து சவுதி அதிகாரிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்ட Rahaf Mohammed al Qunun-ஐ சவுதிக்கு நாடுகடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது தாய்லாந்து ஹோட்டலில் தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளிவரப்போவதில்லை என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்திய Rahaf Mohammed al Qunun தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும்படி சமூக வலைத்தளங்களின் ஊடாக உள்ளுர் அமைப்புக்கள் முதல் உலகத்தலைவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இஸ்லாம் மதத்தை துறந்த காரணத்திற்காக தலைமுடி வெட்டப்பட்டு ஆறு மாத காலமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்த Rahaf Mohammed al Qunun, தான் சவுதிக்கு நாடு கடத்தப்பட்டால் தனது பெற்றோரால் படுகொலை செய்யப்படுவது உறுதி என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து குறித்த விவகாரத்தில் ஐ.நா அகதிகள் அமைப்பு உட்பட பல அமைப்புக்களும் நாடுகளும் தலையிட்டிருந்தபோதிலும் கனேடிய அரசு விரைவாக செயற்பட்டு Rahaf Mohammed al Qunun –க்கு அகதி தஞ்சம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Chrystia Freeland அவர்கள் Rahaf Mohammed al Qunun-க்கு 'தைரியமான புதிய கனேடியப் பிரஜை' என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
