ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம்கோரி வரும் வழியில் தாய்லாந்தில் வைத்து சவுதி அதிகாரிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டார் என்று கூறப்படுகின்ற சவுதி யுவதி Rahaf Mohammed al-Qunun விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்துவருவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவுதி யுவதிக்கு பயணப்பத்திரங்களை வழங்கி அவருடைய உரிமைககள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று கிறீன்ஸ் கட்சி செனட்டர் Sarah Hanson-Young தெரிவித்துள்ளார்.
சவுதிக்கு நாடுகடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த தகவல்களை அடுத்து தாய்லாந்து ஹோட்டலில் தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளிவரப்போவதில்லை என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்திய Rahaf Mohammed al-Qunun, தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும்படி சமூக வலைத்தளங்களின் ஊடாக உள்ளுர் அமைப்புக்கள் முதல் உலகத்தலைவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
தான் சவுதிக்கு நாடு கடத்தப்பட்டால் தனது பெற்றோரால் படுகொலை செய்யப்படுவது உறுதி என்றும் ஏற்கனவே தனது அண்ணன் சவுதியில் தனது ஆட்களுடன் காத்திருப்பதாகவும் Rahaf Mohammed al-Qunun கூறியிருந்தார்.
Rahaf Mohammed al-Qunun தான் தாய்லாந்துக்கு வந்து சேர்ந்தது குறித்து மேலும் கூறும்போது - இஸ்லாம் மதத்தை தான் துறந்த காரணத்திற்காக தலைமுடி வெட்டப்பட்டு ஆறு மாத காலமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார். தனக்கு ஆறு சகோதரர்கள் உள்ளார்கள் என்றும் தனது தகப்பனார் செல்வாக்கு மிக்க அரச அதிகாரி என்றும் Rahaf Mohammed al-Qunun கூறினார்.
குடும்பத்துடன் குவைத்துக்கு நிகழ்வொன்றுக்கு வந்தபோது அங்கிருந்து அதிகாலை நான்கு மணியளவில் யாருக்கும் தெரியாமல் தான் விமானநிலையத்துக்கு ஓடிவந்து தாய்லாந்துக்கு வந்ததாக அவர் கூறினார். தாய்லாந்தில் வைத்து தனது நிலையை ஒருவரிடம் நம்பி கூறியபோது, அவர் தாய்லாந்து அதிகாரிகளிடம் தன்னை காட்டிக்கொடுத்துவிட்டார் என்றும் கூறினார்.
தான் அறிந்த வரையில் தனது தகப்பன் குவைத்திலிருந்து தாய்லாந்து வந்திருப்பதாகவும் தனது மகள் சித்தசுவாதீனமற்றவர் என்று கூறி தன்னை சவுதிக்கு திருப்பி அனுப்புமாறு தாய்லாந்து அரசு மட்டத்தில் பேசியிருப்பதாகவும் தனக்கு அறியக்கிடைத்துள்ளதாக Rahaf Mohammed al-Qunun கூறினார்.
Rahaf Mohammed al-Qunun விவகாரம் தற்போது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் (UNHCR) முற்றுமுழுதாக பொறுப்பெடுக்கப்பட்டிருக்கிறது.
Rahaf Mohammed al-Qunun சவுதிக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார் என்ற உறுதிமொழியை UNHCR அமைப்புக்கு தாய்லாந்து அரசு வழங்கியுள்ளது. Rahaf Mohammed al-Qunun முன்வைத்துள்ள தஞ்சக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரை அகதியாக அங்கீகரிப்பது குறித்த நடவடிக்கையில் UNHCR இறங்கியுள்ளது.
Rahaf Mohammed al-Qunun ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்தவர் என்றாலும் இந்த விடயத்தில் தற்போதைக்கு ஆஸ்திரேலியாவின் பங்கு மிகவும் சிறியது என்றும் Rahaf Mohammed al-Qunun அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதை தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்றும் ஆஸ்திரேலிய சட்ட வல்லுனர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Rahaf Mohammed al-Qunun ஆஸ்திரேலியா வருவதற்கான விஸா - பயணச்சீட்டு ஆகியவற்றை கொண்டிருந்தாலும் அந்த ஆவணங்கள் அவரை அகதியாக ஏற்றுக்கொள்வதற்கோ வேறு வகையில் அவருக்கு சட்ட உதவிகள் வழங்குவதற்கான எந்த கடப்பாடுகளையும் ஆஸ்திரேலியாவின் மீது சுமத்தாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
