அல்- ஜஸீரா என்பது பிரபலமான (news channel ) செய்திச் சேவைகளுள் ஒன்று. தொலைக்காட்சி என்று எடுத்துக்கொண்டால், BBC,CNN, NDTV, CBC, NHK, FOX, SKY என்று நூற்றுக்கணக்கான செய்திச்சேவைகள் அல்லது செய்தி ஒளிபரப்புக்கள் இருக்கின்றன. இவற்றுக்கு இணையாக கடந்த சில ஆண்டுகளாக, பிரபலமாகிவரும் செய்திச்சேவை 'அல்- ஜஸீரா'. இன்று பல சர்வதேச செய்திச்சேவைகள் மத்திய கிழக்கு தொடர்பான நம்பகமான, நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு எடுத்துவர 'அல்- ஜஸீரா'வை நம்பியிருக்கின்றன. அல் ஜஸீராவின் video clips களை, இரண்டு லட்சம், மூன்று லட்சம் டாலர்கள் கொடுத்து BBC, CNN போன்ற செய்திச் சேவைகள் வாங்குகின்றன. அது மட்டுமல்ல, அல்-ஜஸீரா -செய்மதி, கேபிள், சுயாதீனமான தொலைக்காட்சி, இணையம் மற்றும் streaming என்ற முறைகளில், சர்வதேச ரீதியான ஒளிபரப்புக்களை பலமொழிகளிலும் செய்துவருகின்றது. Al Jazeera international, Al Jazeera English, Al Jazeera America, Al Jazeera Balkans (சரஜீவோ, பொஸ்னியா, ஸர்பியா, குரோஸியா பிராந்தியத்திற்கு), Al Jazeera Arabic, Al Jazeera Turks (துருக்கி), Al Jazeera Sports, Al Jazeera Children's channel என்று பல்வேறு ஒளிபரப்புக்களை அல்- ஜஸீரா செய்துவருகின்றது.
'செய்தியின் ஆணிவேர் வரை அலசி, நம்பகமான தகவல்களின் அடிப்படையில், மனிதர்களை மையமாக க்கொண்ட செய்திக்கண்ணோட்டத்தை வழங்குவதே அல்ஜஸீராவின் குறிக்கோள்' என்கிறது அல் ஜஸீரா. அல்ஜஸீராவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட news bureau - செய்தி திரட்டும் மையங்கள் சர்வதேசரீதியாக இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் பத்து மையங்கள் உள்ளன. இன்று மேற்குலக நாடுகளின் செய்திச் சேவைகளுக்கு பெருஞ்சவாலை விடுத்து வருகிறது, அல் ஜ ஸீரா. எம்மி, க்ரேஸியர்ஸ், ப்ராங்ளின் டி ரூஸ்வல்ட் ப்ரீடம் விருது, டூ-பொண்ட் விருது என்று பல சர்வதேச விருதுகளை அல் ஜஸீரா வென்றிருக்கிறது.
அல் ஜஸீரா என்பது ஒரு அரபு வார்த்தை போல இருக்கிறதே, இந்த ஒளிபரப்பு எப்படி மேற்குலக நாடுகளில் பிரபலமானது?
அல் ஜஸீராஎன்றால் அரபு மொழியில் 'தீவு' என்று பொருள். பதவியில் இருக்கும் அரசின் புகழ்பாடுவது, எதிரி நாடுகளைக் கடுமையாக விமரிசிப்பது, பக்கச்சார்புடன் செய்திகளை வழங்குவது என்பதே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த தொலைக்காட்சி நிலையங்களின் நாளாந்த நடவடிக்கையாக இருந்த நிலையில், நாங்கள் ஒரு தனி தீவு போல தனித்துவமானவர்கள் என்பதைக்குறிக்கும் அல் ஜஸீரா என்ற பெயரில் கட்டார் Qatar அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹமட் பின் கலீபா என்பவரால் 1996 நவம்பர் மாதம் முதலாம் திகதி, தினமும் 4 மணித்தியால அரபு மொழி, செய்மதி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. ஒருமழைத்துளியின் வடிவில் இதன் logo -அடையாளக் குறியீடு அமைக்கப்பட்டது. இந்த மழைத்துளிக்குள் அல்ஜஸீரா என்ற அரபு மொழி வாசகம் உள்ளடக்கப்பட்டுள்ளது. 1996இல் தான், பிபிசி யின் அரபு மொழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது இந்தச்சந்தர்ப்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகும். பிபிசி யின் அரபு மொழி ஒளிபரப்பில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்கள் அல் ஜஸீராவில் இணைந்தார்கள். பிபிசியின் சுதந்திரமான news reporting, செய்தி வழங்கும் அணுகுமுறை அல் ஜஸீராவில் நிலைபெறத்தொடங்கியது.
மத்திய கிழக்கு நாடுகளில் செய்திகள் எப்போதுமே தணிக்கை செய்யப்பட்டே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அல் ஜஸீராவின் ஒளிபரப்பு செய்மதி மூலமாகவே நடைபெற்றதால் மத்தியகிழக்கு நாடுகளால் இதைத்தடை செய்யவோ, தணிக்கை செய்யவோ முடியவில்லை. அல் ஜஸீரா, தொலைக்காட்சி ஒளிபரப்பில் கருத்துச்சுதந்திரத்தை மத்தியகிழக்கு நாடுகளுக்குக்கொண்டுவந்த முதல் ஒளிபரப்பு நிலையமாக பரிணமிக்க, இந்த பிராந்தியத்தில் ஏற்கனவேஇருந்த அரபு மொழி ஒளிபரப்புக்கள் நேயர்களின் அபிமானத்தை இழக்கத்தொடங்கின. சவுதி அரேபியா, கட்டார், குவைத், பஹாரின் போன்றநாடுகளின் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை முன் வைத்தது அல்ஜஸீரா. சிரியா, அண்டை நாடான லெபனானுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள எடுத்துவந்த முயற்சிகளை அல் ஜஸீரா விமரிசித்தது. எகிப்தின் சட்டத்துறையின் நடவடிக்கைகள் தொடரபாக கேள்விகளை முன்வைத்தது. அல்ஜீரியா அரசு தொடர்பாக, அல் ஜஸீரா 1999இல் முன்வைத்த விமரிசனங்கள் காரணமாக, மக்கள் அல்ஜஸீராவின் ஒளிபரப்பைப் பார்க்கமுடியாதவண்ண்ணமாக, மின்விநியோகத்தை இடை நிறுத்தி வைத்தது அல்ஜீரிய அரசு.
லெபனானில் இடம்பெற்ற சிவில் யுத்தம் தொடர்பாக அல் ஜஸீரா ஒளிபரப்பிய நடுநிலையான தகவல்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான நேயர்களை இழுத்தெடுத்தது. 2001 இல் ஒஸாமா பின் லாடன் போன்ற அல் கெய்தா தலைவர்களின் உரைகளையும் ஆப்கனிஸ்தான், தலிபான் தலைவர்களின் உரைகளையும் ஒளிபரப்பிய வகையில், செய்தியின் இரண்டு பக்கங்களையும் முன்வைக்கும் நம்பகமான, நடுநிலையான ஒளிபரப்பு நிலையமாக மேற்குலக நாடுகளாலும் வரவேற்கப்பட்டது, அல் ஜ ஸீரா. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள BBC, CNN போன்ற நிலையங்கள் கூட, மத்தியகிழக்கு நாடுகளைப்பொறுத்தவகையில், இஸ்ரேலுக்கு சாதகமாகவும் பாலஸ்தீனம் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதகமாகவும் செய்திகளை எடுத்துவருவதாக்க் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
அல் ஜஸீராவின் செய்தி ஒளிபரப்பு பற்றி இப்படியான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லையா?
கட்டார் அரசிற்கும் அதன் வெளிநாட்டுக்கொள்கைக்கும் 'ஊது குழலாக' அல் ஜ ஸீரா செயல்பட்டுவருவதாக பலவேளைகளில் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. செய்திகளில் எப்போதும் ஒரு இஸ்லாமிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் விமரிசனங்களை முன்வைத்ததுண்டு. எகிப்தில் 'முஸ்லிம் பிரதர்வுட்' என்ற அமைப்புக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்புவதாகவும் சில விமரிசனங்கள் உண்டு. மத்திய கிழக்குப் பிராந்திய அரசியல் பிரச்சனைகளக் கையாளும் போது, சுனி சமூகத்தினருக்கு ஆதரவாகவும் சியா சமூகத்தினருக்கு எதிராகவும் நிலைப்பாட்டை எடுப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால் அல் ஜ ஸீரா இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்தே வந்துள்ளது. இஸ்ரேலின் கருத்துக்களுக்கும் ஈரானின் கருத்துக்களுக்கும் மேற்குலக நாடுகளின் கருத்துக்களுக்கும் சரிநிகர் சம மான மேடையை வழங்குவதாக அது சொல்கிறது. அரபு நாடுகளின் கண்டனத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஹீப்ரூ மொழிபேசும் இஸ்ரேலியரின் கருத்தை முதன் முதலில் ஒளிபரப்பியதும் தலிபான் குறித்த பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை விளக்க அப்போதைய பிரதமர் (2001 இல்) டோனி ப்ளேயருக்கு வாய்ப்பளித்ததும் ஹமாஸ் முதல் செச்னிய தீவிரவாதிகளின் கருத்துக்கள் வரை எடுத்துவந்ததும் இதற்கு போதுமான சான்று என்று அது சொல்கிறது. 'The opposite direction' என்ற நிகழ்ச்சித்தொடர் மூலமாக, அரபு நாடுகளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் கொள்கைகள், கண்ணோட்டங்கள் தொடர்பான முரண்பட்ட அல் ஜஸீராவின் கருத்துக்களுக்கு, இஸ்லாமிய பழமைவாதிகள் பலமுறை கண்டனங்களை முன்வைத்துள்ளனர். கட்டாரின் அண்டை நாடுகள் அல் ஜஸீரா குறித்து பல முறை முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன. சில நாடுகள் அல் ஜஸீராவின் செய்மதி ஒளிபரப்பை jaming என்ற முறையில் அண்மைக்காலத்தில் பலதடவைகள் முடக்கியுள்ளன. அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் பல நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அல் ஜஸீராவுக்கு விளம்பரங்களை வழங்கவேண்டாம் என்று தென்னாப்பிரிக்கா பல நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
எப்படி இருந்தபோதும் பிபிசி,சிஎன்என் போன்ற நிலையங்கள் அல் ஜஸீராவின் செய்தித்தொகுப்புக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், மத்தியகிழக்கு, இந்தியா, ஆஸ்திரேலியா என்று அல் ஜஸீரா இன்று நுழையாத இடமில்லை. அல் ஜஸீராவின் வருகையால் news reporting- செய்தி வழங்குதலில் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டிருக்கிறது. செய்தியைப் பெற விழைவோரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
