அமெரிக்காவின் New England பிராந்தியத்தின் Vermont பகுதிக்கான ஆளுநர் தேர்தலில் 14 வயது சிறுவன் ஒருவன் போட்டியிட்டு அப்பகுதி வாக்காளர்களின் எட்டு வீத ஆதரவை பெற்றுள்ளான்.
Vermont பகுதிக்கான ஆளுநர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அமெரிக்க தேர்தல் நடைமுறையின் பிரகாரம் அந்த ஆளுநர் தேர்தலுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் பூர்வாங்க தேர்தல் நேற்று நடைபெற்றது.
ஆளுநர் பதவியை வென்றெடுப்பதற்கான இந்த தேர்தலில் மிக முக்கிய வேட்பாளர்கள் போட்டியில் குதித்திருந்தனர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர்கள், முன்னாள் படையதிகாரி, திருநங்கை என்று பல்வேறு வகையானவர்கள் போட்டியிட்ட தேர்தலில் 14 வயதான Ethan Sonneborn போட்டியிட்டு தொகுதியின் எட்டு வீதமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.
14 வயதான Ethan Sonneborn வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றிருக்காவிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருந்தார்.
Vermont பகுதியின் தேர்தல் விதிமுறைகளின் படி, அந்த தொகுதியில் நான்கு வருடங்கள் வசித்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். வயதெல்லை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதன்பிரகாரம், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த Ethan Sonneborn தனது தொகுதியின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பல்வேறு முன்னேற்றகரமான பணிகள் குறித்தும் தன்னிடம் பல முற்போக்கான சிந்தனைகள் உள்ளதாக கூறியிருந்தார்.
நேற்றைய தகுதிபெறும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் Ethan Sonneborn ஊடகங்களின் மத்தியிலும் இளையவர்களின் மத்தியிலும் தனது அரசியல் ஆர்வத்தினாலும் துணிச்சலினாலும் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறார்.
