கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு, வரும் மாதங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மிகப்பெரியளவில் பாதிக்கவுள்ளது என்றும், இவர்களில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் நாடளாவிய ரீதியில் வேலைகளை இழக்கப்போகிறார்கள் என்றும் Refugee Council of Australia எதிர்வுகூறியுள்ளது.
சிட்னியிலுள்ள ஒரு நகரத்தை மாதிரி பிரதேசமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்பிரகாரம் இந்த தரவினை Refugee Council of Australia வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசத்தில் வசித்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிடையே முன்னர் நிலவிய 19.3 வீத வேலையில்லாதவர்களின் சதவீதம் கொரோனா பரவலுக்கு பின்னர் 41.8 வீதமாக உயர்ந்துள்ளது என்று கவுன்ஸிலின் அறிக்கை கணித்துள்ளது.
'ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு வேலைகளை இழக்கும்போது அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடிய அபாயமுள்ளது. அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த பெரும்பாலானவர்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். ஆஸ்திரேலியர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளோடு மேலதிக பிரச்சினைகளையும் எதிர்நோக்குபவர்கள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள். ஆகவே, பேரிடருக்குள் தள்ளப்படும் அபாயத்திலுள்ள இவர்களது விடயத்தில் அரசாங்கம் மாத்திரமல்லாமல் சமூக அமைப்புக்களும் ஆதரவாக செயற்படவேண்டிய காலகட்டம் இதுவாகும்'- என்று Refugee Council of Australia-இன் கொள்கை மற்றும் ஆய்வுப்பணிப்பாளர் Rebecca Eckard தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
