வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்தினால் கடுமையான தண்டனை

புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் வாகனம் ஓட்டும்போது அலைபேசி அல்லது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தினால், ஓட்டுநர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டுமென்று ஆஸ்திரேலிய மருத்துவ அமைப்பு (Australian Medical Association - AMA) கோருகின்றது. அதிகரித்துவரும் வீதிவிபத்துகளைக் குறைப்பதற்கு ஆஸ்திரேலிய மருத்துவ அமைப்பு முன்வைக்கும் சில பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.

Use of phone while driving

File photo dated 13/08/14 of a woman talking on her phone while driving Source: Jonathan Brady/PA Wire

L-plate மற்றும் P-plate ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தி, காவல்துறையிடம் அகப்பட்டால், 12 மாதங்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமத்தைத் தடை செய்ய வேண்டும் என்று AMA கூறுகிறது.

சாலைப் பாதுகாப்பு குறித்து AMA வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் முன்மொழியப்பட்ட பல கடுமையான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இருந்து ஓட்டுநர்கள்  நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்வது அவசியம் என்று AMA தலைவர் Michael Gannon கூறுகிறார்.

"L-plate மற்றும் P-plate ஓட்டுநர்களுக்கு நாம் முன்வைக்கும் யோசனை மிகக் கடுமையானவை என்று படலாம்.  ஓட்டுநர் தகுதி என்பது ஒரு பொறுப்பு, அது வெறும் ஒரு உரிமை மட்டும் இல்லை. மேலும், புதிய ஓட்டுநர்கள் ஆரம்பத்திலிருந்து நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வது அவசியம்."

ஆஸ்திரேலியாவில் நிகழும் 10 சாலை விபத்துகளில் சுமார் 9 மனிதப் பிழைகளால் ஏற்படுகின்றன.

வாகனம் ஓட்டும்போது அலைபேசிகள் அல்லது பிற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்தால், இந்தப் புள்ளிவிபரத்தைக் குறைக்க முடியும் என்று AMA நம்புகிறது.

"அது நிறுத்தப்பட வேண்டும்.  விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, வேறு இயக்கிகளைப் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டவேண்டும் என்பதற்கான ஆதாரம் நிறைய இருக்கிறது.  இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் அழைப்பு விடுகிறோம், சாலை விபத்து காரணமாக மரணம் மட்டுமல்ல, பல்வேறு சுமையை எமது சமூகம் தாங்குகிறது.  அதைக் குறைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் AMA தலைவர் Michael Gannon.

AMA விடுத்துள்ள அழைப்பை NRMA எனப்படும் The National Roads and Motorists Association என்ற அமைப்பு வரவேற்றுள்ளது.

வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் கவலையளிப்பதாக NRMAயின் Peter Khoury கூறுகிறார்.

"இருபது சதவீதமான ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறார்கள். அதே எண்ணிக்கையிலான ஓட்டுநர்கள் இன்றும் சட்டவிரோதமாக அலைபேசியை எடுத்து ஒரு தொலைபேசி அழைப்பையும் செய்வார்கள், அதனால்தான் நாங்கள் அதிகளவிலான சாலை விபத்துகளைப் பார்க்கிறோம்."

வாகனம் ஓட்டும்போது அவர்களது கவனத்தைத் திசை திருப்பாமல் இருக்க, அலைபேசிகளை மறைத்து வைக்கத் தாங்கள் ஊக்குவிப்பதாக NRMAயின் Peter Khoury கூறுகிறார்.

வாகனம் ஓட்டும்போது அலைபேசியின் பாவனை குறித்த ஆஸ்திரேலிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது போலவே முக்கியமானது என்கிறார், வாகனம் ஓட்டப் பயிற்றும் ஆசிரியர், Henry Naser.

ஆஸ்திரேலியாவிற்கு வரும் சர்வதேச வாகன ஓட்டிகளுக்கு ஆஸ்திரேலிய சாலைகளில் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார் சிட்னி சார்ந்த Safe-2-Drive என்ற நிறுவனத்தின் Henry Naser.

வெளிநாட்டவர் விமான நிலையங்களில் வந்திறங்கும் போதே, ஆஸ்திரேலிய வாகன விதிகள் குறித்த துண்டுப்பிரசுரங்களைக் கையளிக்கலாம் என்ற சிந்தனையை முன்வைக்கிறார் Henry Naser.

"ஒரு புதிய நாட்டிற்கு வருபவர்கள், இங்கு வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இல்லாதவர்களுக்குப் பல விடயங்கள் தெரியாமல் இருக்கலாம், அதனால் விமான நிலையத்தில் கொடுக்கப்படும் சிறிய துண்டுப்பிரசுரம் அல்லது வாடகைக் கார்களை வாடகைக்கு எடுக்கும் போது இது குறித்து அறிவிப்பது நல்லது. இந்த நாட்டில் வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். "

தொழில்முறை ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு வேளையிலும், எவ்வளவு நேரம் வாகனம் ஓட்டினார்கள் என்ற பதிவை அவர்கள் செய்ய வேண்டியதைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் AMA பரிந்துரைத்துள்ளது.

 

 

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan, Michelle Rimmer

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now