அமெரிக்க அதிபர் Donald Trump-க்கும் ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull-க்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடல், ஏற்கனவே கூறப்பட்டதைப் போல் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை என Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நீண்டிருக்க வேண்டிய உரையாடலை 25 நிமிடத்திலேயே Donald Trump முடித்துக் கொண்டதாகவும், அந்த நாளின் மோசமான அழைப்பு இதுவென பிரதமர் Turnbull-இடம் கூறியதாகவும் அச்செய்தி கூறுகின்றது.
மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் Obama-வுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்ட அகதிகள் ஒப்பந்தம் தன்னை அரசியல் ரீதியாக படுகொலை செய்யும் ஒன்றெனத் தெரிவித்த Trump, அது ஒரு மிக மோசமான ஒப்பந்தமென கோபத்துடன் கடும்தொனியில் பிரதமரிடம் சாடியதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த உரையாடலின் ஒரு கட்டத்தில் தொலைபேசியை தனது காதிலிருந்து விலக்கிய Trump, தொடர்ந்து பேச விரும்பாத நிலையில் காணப்பட்டார் என CNN-இன் White House Correspondent, Jim Acosta தெரிவித்துள்ளார்.
இச்செய்தி தொடர்பில் கருத்துக்கூற மறுத்துள்ள பிரதமர் Malcolm Turnbull, தன்னுடனான தொலைபேசி அழைப்பை அதிபர் Trump துண்டித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று மட்டும் கூறியுள்ளார்.
இதேவேளை ஆஸ்திரேலியாவுடன் செய்துகொள்ளப்பட்ட அகதிகள் உடன்படிக்கையை மதித்து நடப்பதா இல்லையா என்ற இறுதி முடிவை அதிபர் Trump இன்னமும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் இந்த ஒப்பந்தத்திற்கு நிச்சயம் மதிப்பளிப்பார் என கன்பராவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க இன்றைய தினம் தனது twitter பக்கத்தில் "உங்களால் நம்ப முடிகிறதா? ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கு Obama-வின் நிர்வாகம் இணங்கியிருக்கிறது. ஏன்? இந்த முட்டாள்தனமான ஒப்பந்தத்தைப் படிக்கப்போகிறேன்" என Donald Trump கூறியுள்ளமை இவ்வொப்பந்தம் தொடர்பில் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைக் காட்டுவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மனுஸ் மற்றும் நவுறு தீவிலுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவது குறித்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி தொடர்கிறது.
