நவுறுவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட அகதிகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் நவுறு தீவுக்கு வருவதற்கு நவுறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நவுறு அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்து நவுறு தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள், அந்த தீவில் வாழலாம் அல்லது மூன்றாவது நாடொன்றில் குடியேறலாம் என்ற தெரிவு வழங்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு சென்று குடியேறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து அண்மையில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால், நவுறுவுடன் ஒப்பிடும்போது அங்குள்ள சூழ்நிலை சில விடயங்களில் பரவாயில்லை என்றாலும் நீண்ட கால வாழ்க்கைக்கான முன்னெடுப்புக்கள் அமெரிக்காவில் சென்று இறங்கிய இந்த அகதிகளுக்கு ஏதுவாக இல்லை என்று நவுறு அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நவுறு தீவு ஆஸ்திரேலியாவில் அகதிகள் நல அமைப்புக்கள் பிரச்சாரம் செய்வதைப்போன்ற கொடூரமான தேசம் இல்லை என்றும் இங்குள்ள மக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நவுறு அரசு பொறுப்பான வகையில் சகல வசதிகளை வழங்கி வருகிறது என்றும் நவுறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
