நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள் அங்கு கடின வாழ்வை எதிர்நோக்கிவருவதாக முறையிடுகிறார்கள் என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நல்வாழ்வை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற அகதிகள் அங்கு வேலையைத்தேடிக்கொள்வது போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளில் சவால்களை எதிர்கொள்வதாக நவுறுவிலுள்ள தமது நண்பர்களுக்கு கூறியுள்ளார்கள் என்று Peter Dutton தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் இந்த அகதிகள் நவுறுவிலுள்ள தங்கள் நண்பர்களை நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியமருமாறும் அங்குதான் குடியேற்றவாசிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறந்தது என்றும் ஊக்குவித்துவருவதாக தனக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக Peter Dutton கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் welfare system எவ்வளவு திறம்பட நிர்வகிக்கப்பட்டுவருகிறது என்பது குறித்தும் அதனை தமது கட்சி எவ்வாறு முன்னெடுத்துவருகின்றது என்பது பற்றியும் நாடாளுமன்றில் பேசும்போதே Peter Dutton மேற்கண்ட தகவலை கூறியிருக்கிறார்.
நவுறு தீவிலிருந்து மூன்றாவது நாடொன்றுக்கு சென்று அங்கு குடிமயர்வதற்கு சம்மதித்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை பல தொகுதிகளாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து தஞ்சமடைந்தவர்கள் ஆவர்.
