அமெரிக்காவுக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரிகளினது சமூக வலைத்தள அடையாளப்பெயர்களை (username ) விசா விண்ணப்ப படிவத்தில் கோருகின்ற நடைமுறையை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது.
விண்ணப்ப படிவங்களில் கேட்கப்படும் அத்தியாவசிய அடையாள விவரங்களான தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் இனிமேல் சமூக வலைத்தள அடையாளப்பெயர்களையும் அமெரிக்க குடிவரவுத்திணைக்களத்திடம் வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களிடம் மாத்திரம் கடந்த காலங்களில் கோரப்பட்டுவந்த இந்த சமூக வலைத்தள அடையாளப்பெயர்கள் இனி அனைத்து விண்ணப்பதாரிகளிடமும் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இதன் மூலம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேரிடம் மேற்குறிப்பிட்ட வகையில் - சமூகவலைத்தள அடையாளப்பெயர்கள் கேட்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அறிமுகமாகும் புதிய முறை, வருடமொன்றுக்கு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் சுமார் ஒன்றரை கோடி வெளிநாட்டவர்களை பாதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக பேணிவருகின்ற Facebook, Instagram, Twitter, Reddit, YouTube, Weibo போன்ற அனைத்து வகையான சமூக வலைத்தள அடையாளப்பெயர்களும் இந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படுகின்றன.
Share
