அமெரிக்காவில் மீள் குடியமர்த்தப்பட்ட மனுஸ் மற்றும் நவுறு அகதிகளுக்கு மூன்று மாதங்கள் மாத்திரமே அரச உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அதன் பின்னர் குறிப்பிட்ட அகதிகள் தாங்களே தங்களது வாழ்வை பொறுப்பெடுத்துக்கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அரசுடன் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட அகதிகள் உடன்படிக்கையின் பிரகாரம் அங்கு மீளக்குடிமர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட 1200 அகதிகளின் நிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகமொன்று மேற்கொண்ட செய்தி ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நவுறுவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்ட ரோஹிங்யா அகதிச்சிறுவன் ஒருவன் தனது அமெரிக்க வாழ்வின் அனுபவம் குறித்துக்கூறும்போது - இதுவரை 445 அகதிகள் மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து அமெரிக்காவில் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் - அமெரிக்க அரசு தனக்கான மூன்று மாத தற்காலிக இருப்பிடத்துக்கு உதவி செய்ததாகவும் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட விமானப்பயணச்சீட்டுக்கான பணத்தை வட்டியில்லா கடனடிப்படையில் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மூன்று மாதங்களின் பின்னர் தனது வாழ்க்கையை தானே பொறுப்பெடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டதன் பிரகாரம் தற்போது தான் இத்தாலிய உணவகம் ஒன்றில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். கொடூரமான அடக்குமுறையிலிருந்து தப்பிவந்து ஐந்து வருடங்கள் இன்னுமொரு கொடுமையான தீவில் வாழ்க்கையை தொலைத்து தற்போது ஓரளவுக்கு புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்கும் நம்பிக்கை தனக்கு மனதில் துளிர்விட்டிருந்தாலும் மனுஸ் - நவுறு தீவு தடுப்பு நினைவுகள் இன்னமும் தன்னை தொந்தரவு செய்துகொண்டேயிருப்பதாகவும் கண்களை மூடினால் அங்குள்ள தனது உறவுகளின் முகங்கள்தான் நினைவில் வந்து நிற்பதாகவும் கூறுகிறார்.
Share
