வட அமெரிக்காவின் பெரும் பகுதியை Polar vortex எனப்படும் கடுமையான உறைபனிக் குளிர் வாட்டி வதைப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதன் தாக்கம் கனடாவிலும் உணரப்படுகிறது.
உறைபனியில் விறைத்தும், அதனுடன் தொடர்புபட்ட விபத்துக்களில் சிக்கியும் எட்டுப் பேர்வரை உயிரிழந்திருக்கிறார்கள். சில இடங்களில் குளிரின் அளவு கடந்த பல தசாப்தங்களில் மட்டுமன்றி வரலாற்றிலேயே முதல் முறை என்ற கணக்கில் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.சிக்காக்கோ பிராந்தியம் ரஷ்யாவின் சைபீரியா போன்று பனியில் உறைந்துள்ளது.
உலகம் வெப்பமடைந்து வருகின்றது என சூழலியலாளர்கள் அபாயக்குரல் எழுப்பி வந்தாலும் பல நாடுகளிலும் பனிக் காலம் தாங்கமுடியாத மிக மோசமான குளிரை ஏற்படுத்துகின்றது.அவ்வாறானால் புவி வெப்பமடைவதாகக் கூறப்படுவது பொய்யா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
இத்தகைய கேள்வியை எழுப்புவோருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களும் சேர்ந்துகொண்டு சர்ச்சையைக் கிளப்புகிறார். அமெரிக்கர்களை வதைக்கும் கடுங்குளிர் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கருத்து சூழலியல் விஞ்ஞானிகளை சீற்றமுற வைத்துள்ளது.
"புவி வெப்பமடைவதாகச் சொன்னார்களே.. . அது எங்கே நடக்கிறது ? இப்போது அது விரைவாக வரவேண்டும். நமக்கு அது அவசியம் தேவைப்படுகிறது" என்ற சாரப்பட அவர் பதிவிட்ட ருவீற்றர் கருத்துக்கு விசனத்துடன் விளக்கம் அளிக்கும் அவசியம் காலநிலை நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பூமி வெப்பமடைவது உட்பட காலநிலை மாற்றங்கள் பற்றிய முடிவுகளை " புரளிகள் " என மறுத்து வருபவர் அதிபர் ட்ரம்ப். புவி உஷ்ணமடைவதற்கு மனித நடவடிக்கைகளே முதற்காரணம் என்பதை அமெரிக்க அரசாங்கமும் நூற்றுக்கணக்கான விஞ்ஞான ஆய்வு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையிலும் கூட அதனைக் கடுமையாக எதிர்ப்பவர் ட்ரம்ப்.
பூமியின் வட துருவத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களில் இருந்து வெளியேறும் குளிர்ப்பனிப் புயலே தெற்கே நகர்ந்து அமெரிக்கப் பிராந்தியம் எங்கும் கடும் உறை பனியை தோற்றுவித்திருப்பதாக காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக வட, தென் துருவங்களில் தோன்றும் இந்த மாறுதலை Polar vortex என்கின்றனர். பூமி அதிக வெப்பமடைவதால் சமுத்திரங்கள் சூடேறி வளிமண்டலத்தில் ஆவியாகும் ஈரப்பதனை உருவாக்குவதால் அது நீராவிப் புயலாக மாறி உலகின் பல பகுதிகளிலும் குளிர் காலநிலையைத் தோற்றுவிக்கின்றது என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
