SKIP TO MAIN CONTENT

மாடுகளுக்குப் பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், மாடுகளுக்குப் பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவை மாடுகளுக்கென்று, ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஆரம்பித்து வைத்தார். பசுக்களைத் தெய்வமாக வணங்கும் ஒரு நாட்டில், இப்படியானதொரு சேவை ஆரம்பிக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாலும், துணை முதல்வர் இந்த சேவையை ஆரம்பித்த சில நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் வேறொரு பகுதியில், ஒரு 15 வயதுக் குழந்தையின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு தகப்பனார் ஓடி வருவதை இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன.... அந்த சிறுவன் இறக்கக் காரணம்? அவசர சிகிச்சைக்கு அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் சேவை இல்லை என்பது தான் காரணம்.

Keshav Prasad Maurya
Keshav Prasad Maurya Source: Keshav Prasad Maurya

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

Gauvansh Chikitsa mobile van எனப்படும் பசுக்களுக்கான வாகனம், நோயுற்ற அல்லது காயமடைந்த பசுக்களை, சிகிச்சைக்காகக் கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.  ஆரம்பத்தில், இந்த சேவை அலஹாபாத், கோரக்பூர், லக்னோ, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் MNREGA Mazdoor Kalyan Sanghathan என்ற அமைப்பின் ஆதரவுடன் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  பசுக்கள் பால் தருவதை நிறுத்தியவுடன், அந்தப் பசுக்களைக் கைவிட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக, யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றபின், பசுக்களின் பாதுகாப்புக்காக சிறப்பு கவனம் எடுக்கப்படுகிறது.  முதல் சில நாட்களில், மாட்டிறைச்சி நுகர்வுக்குக் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதுடன் மாநிலத்தில் சட்டவிரோதமான மாடிறைச்சி விற்பனை நிலையங்கள் மீது தண்டனை விதிக்க ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath Feeds Cows In Lucknow
Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath feeding cows along with Mulayam Singh Yadav's daughter-in-law Aparna Yadav and Deputy CM of UP Dr Dinesh Sharma. Source: Getty

இந்தியாவின் மற்றைய பகுதிகளிலும், மாநில அரசுகள் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான கடுமையான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.  வரும் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத் மாநிலத்தில், மாடு ஒன்றைக் கொலை செய்தவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.  மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க 24 மணி நேர அவசர தொலைபேசிச்சேவையை ஹரியானா மாநிலம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது.  ஒவ்வொரு மாட்டிற்கும் ஒரு அடையாள இலக்கம் கொடுப்பதற்கு அந்த மாநிலம் தற்போது தயாராகி வருகிறது.

மாடுகளுக்குத் தனியான ஆம்புலன்ஸ் சேவை என்பது புதிய விடயமில்லை.  இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜர்காந்தில் (Jharkhand) இப்படியான சேவை 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரு இலட்சம் பேருக்கு ஒரு மருத்துவ நிலையம் என்றிருக்கும் உத்தரப்பிரதேசத்தில், இப்படியானதொரு சேவை ஆரம்பிக்கப்பட்டது, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

சாலை விபத்தில் கொல்லப்பட்ட அவரது 3 வயது மகனின் உடலுடன் காத்திருந்த Safan Rai என்பவருக்கு அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்திருக்கவில்லை.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now