வெளிநாடுகளில் வைத்து கைதுசெய்யப்படும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலேயே இக்கைதுகள் அதிகம் இடம்பெற்றதாக State of Play வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2018-2019 காலப்பகுதியில் உலகெங்கும் 1572 கைதுசம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் பெரும்பாலானவை அந்தந்த நாடுகளிலுள்ள சட்டங்களை மீறியமையுடன் தொடர்புடையவை என குறிப்பிடப்படுகிறது.
எனவே வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் அந்த நாடுகளின் சட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றை மதித்து நடந்துகொள்வது அவசியம் என வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்தார்.
இதேவேளை 2018-19 காலப்பகுதியில் வெளிநாடு சென்ற சுமார் 11 மில்லியன் ஆஸ்திரேலியர்கள், களவு முதல் மரணம் சம்பவித்தமை வரையான 13 ஆயிரத்து 715 விடயங்கள் தொடர்பில் தூதரகத்தின் உதவியைக்கோரியதாகவும் இது கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 20 வீத அதிகரிப்பு எனவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
எனினும் தூதரகத்தின் உதவியைக்கோருவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு நியூசிலாந்து மற்றும் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் முக்கிய காரணம் என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, வெளிநாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத சம்பங்களுக்கு தயார்நிலையில் இருப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
