கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலியர்களைப் பராமரித்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு இளம் பெண்ணின் மாதிரிகளை, நாட்டின் பெரிய மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி, ஒரு மாதிரி அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த மாதிரி, நேற்று ஒரு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் உறுதிப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவிலிருந்து அதிகமானோர் வெளியேறுவதற்காக, புதிய தனிமைப்படுத்தப்பட்ட தளம் வடக்கு பிராந்தியத்தில் ஹோவர்ட் ஸ்பிரிங்ஸில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 15 பேர் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணிக்கை தற்போது, 31,530 பேராக உயர்ந்துள்ளது.
இதுவரை 638 பேர் இந்த வைர்ரஸ் தொற்றினால் இறந்துள்ளார்கள். இருப்பினும், இந்தத் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக தற்போது உலகளவில் 1,764 ஆக உள்ளது.
இந்த தொற்று ஆரம்பித்த ஹூபேயில், இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட 867 பேர், ஆபத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.
வுஹான் மாநிலத்திலிருந்து வெளியேறும் ஆஸ்திரேலியர்கள் டார்வினுக்கு அருகிலுள்ள ஒரு பழைய சுரங்க முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஏறக்குறைய 260 ஆஸ்திரேலியர்கள் வுஹானில் இருந்து விமானம் மூலம் இங்கு கொண்டுவரப்படுவார்கள். அப்படி வருபவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்ல என்றும் அவர்களுக்கு நோய்வாய்ப்பட்டதற்கான எந்த அறிகுறிகளையும் இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, இரண்டு முறை விமானத்தில், பின்னர் டார்வினில் உள்ள RAAF தளத்திலும், மீண்டும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு வரும்போது என்று மொத்தம் ஐந்து முறை திரையிடப்படுவார்கள்.
டார்வின் வந்தவுடன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் எல்லோரும் நேரடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரெண்டன் மர்பி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியர்கள் போல, வுஹான் அல்லது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வேறு நபர்கள் விமானங்கள் மூலம் கொண்டுவரப்படுவார்கள் என்று மக்கள் கருதக் கூடாது என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்துள்ளார்.
Share
