SKIP TO MAIN CONTENT

ஆண்டொன்றுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் அகதிகள்:லேபர் 32,000-லிபரல் 18,750!

Scott Morrison and Bill Shorten
Scott Morrison and Bill Shorten Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படும் லேபர் கட்சியை அகதிகள் விவகாரத்தில் மடக்குவதற்கு பிரதமர் Scott Morrison திட்டமிட்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டொன்றுக்கு நாட்டுக்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கை விடயத்தில் இறுக்கமான கொள்கைளை அறிவிக்கவுள்ள Scott Morrison, அந்த விடயத்தில் லேபர் கட்சியின் பலவீனத்தை நாட்டு மக்களின்முன்வைத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கூடுதல் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மூன்று வாரங்களாக லிபரல் கட்சியை விட முன்னணியில் நிற்கும் லேபர் கட்சி கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் அபாரமான பெறுபேறுகளை காண்பித்துள்ளது. லிபரல் கட்சி சிறிய முன்னேற்றங்களை காண்பித்துவருகின்றபோதும் லேபர் கட்சி 52 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லிபரல் 48 புள்ளிகளையும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

லிபரல் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் நாட்டுக்குள் உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை தற்போது இருக்கும் நடைமுறையின்படி 18 ஆயிரத்து 750 என்ற அளவிலேயே அடுத்த 3 ஆண்டுகளுக்கும் உள்வாங்குவது என Scott Morrison முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், லேபர் கட்சி ஆட்சியைப்பிடித்தால் இந்த தொகையை 32 ஆயிரமாக அதிகரிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

அதேவேளை, புதிதாக நாட்டுக்குள் அனுமதிக்கும் அகதிகளில் 40 வீதமானவர்களை regional பிராந்தியங்களில் கொண்டுபோய் குடியமர்த்தப்போவதாகவும் லிபரல் கட்சி அறிவித்திருக்கிறது. ஆனால், லேபர் கட்சி ஆண்டொன்றுக்கு 32 ஆயிரம் அகதிகளை உள்வாங்கும் குடிவரவுக்கொள்கையை எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு கடைப்பிடிக்கப்போவதாகவும் 2025 - 26 ற்குப்பின்னர் அந்த தொகையை குறைத்து அதனை வேறு வகையில் மாற்றியமைக்கவுள்ளதாகவும் உறுதியளித்திருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now