கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு சிட்னி வந்தவர்களில் 55 பேர் விக்டோரியாவுக்குள் நுழைந்துள்ளமை தொடர்பில் மாநில Premier Daniel Andrews சீற்றமடைந்துள்ளார்.
நியூசிலாந்திலிருந்து நியூ சவுத் வேல்ஸிற்கும், Northern Territory- க்குமான பயணம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப்பயண விதிகளின்படி, நியூசிலாந்திலிருந்து வருபவர்கள் எந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுமின்றி நியூ சவுத் வேல்ஸிற்கும், Northern Territory-க்கும், ACT-க்கும் பயணிக்கமுடியும்.
இவர்கள் மீண்டும் நியூசிலாந்து திரும்பும்போது அங்கு இவர்களது சொந்த செலவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விதிகளை ஏற்றுக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலிருந்து நியூசவுத் வேல்ஸிற்கு வந்த பயணிகளில் 55 பேர் அங்கிருந்து மெல்பேர்னுக்கான உள்ளூர் விமானசேவையில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மெல்பேர்னுக்குள் வந்திருக்கிறார்கள்.
இந்தத்தகவல் காலதாமதமாகவே விக்டோரிய அரசுக்கு தெரியவந்ததாவும், மெல்பேர்ன் வந்தவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என்ற விபரங்களும் தாமதமாகவே வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய Premier Daniel Andrews, நியூசிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான பயண ஏற்பாட்டில் பங்கு வகிக்காத விக்டோரிய மாநிலத்திற்கு வருவதற்கு பயணிகளை அரசு எப்படி அனுமதித்தது எனவும் கேள்வியெழுப்பினார்.
ஆனால் விக்டோரிய மாநில அரசின் பிரதிநிதி ஒருவருக்கு நியூசிலாந்து பயணிகள் விக்டோரியா வருகிறார்கள் என்பது தெரியும் என தற்காலிக குடிவரவுத்துறை அமைச்சர் Alan Tudge தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நியூசிலாந்திலிருந்துவந்த பயணிகளில் 25 பேர் உள்ளூர் விமானசேவை ஊடாக பெர்த்திற்கு வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் தற்போது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan தெரிவித்தார்.
மேலும் இருநாடுகளுக்கிடையிலான இப்பயண ஏற்பாட்டில் மேற்கு ஆஸ்திரேலியாவும் பங்கெடுக்காததால் நியூசிலாந்து பயணிகளை தமது மாநிலம் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share
