2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ”Apple" உபகரணங்கள் தொடர்பான விவரங்களை உலகிலேயே அதிகூடிய எண்ணிக்கையில் முன்வைத்த நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளின் அரசுகளும் அவற்றின் பாதுகாப்புத்தரப்பினரும் Apple நிறுவனத்தை அணுகுவது வழக்கம். தங்களது நாடுகளில் பயன்படுத்தப்படும் Apple உபகரணங்கள் தொடர்பான Apple ID முதல் IMEI வரையான பல தகவல்களை Apple நிறுவனத்திடம் முன்வைப்பர். தாங்கள் முன்னெடுத்துவரும் பாதுகாப்பு விசாரணைகள், நடத்திவரும் வழக்குகள் என்று பல்வேறு காரணங்களுக்காக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுவது வழக்கம். இந்தக்கோரிக்ககைளின் நியாயத்தன்மையை பொறுத்து Apple நிறுவனம், குறிப்பிட்ட நாடுகளுக்கு அந்த தகவல்களை வழங்குவது குறித்து முடிவெடுக்கும்.
2018 ஆம் ஆண்டின் முதல் அரைவாசி காலப்பகுதியில் ஆஸ்திரேலிய அரசு - பாதுகாப்பு பிரிவினர் 3919 Apple உபகரணங்கள் தொடர்பான சுமார் 2357 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவற்றில் 1987 கோரிக்கைகளுக்கான தகவல்களை தாங்கள் வழங்கியுள்ளதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தக்காலப்பகுதியில் அதிகூடிய கோரிக்கைகளை முன்வைத்த நாடு ஜேர்மனி என்றும் இரண்டாவது நாடு அமெரிக்கா என்றும் Apple நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பெய்ன் மற்றும் சிங்கப்பூர் நான்காம் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
Share
