ஆஸ்திரேலியர்களை பெருந்தொகையில் பலியெடுத்துவரும் Flu-பருவ கால வைரஸ் காய்ச்சல் இந்த வருடம் நினைத்துப்பார்க்கமுடியாதளவு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த ஆறு மாத காலத்தில் 287 மரணங்கள் வைரஸ் காய்ச்சலால் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் சுமார் ஐம்பது மரணங்கள் விக்டோரியாவில் மாத்திரம் இடம்பெற்றிருப்பதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விக்டோரியாவில் இந்தக்காய்ச்சலால் ஏற்பட்டுள்ள மரணங்கள் எட்டு மடங்கு அதிகம் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
விக்டோரியாவில் இதுவரை சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக விக்டோரிய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
Influenza A எனப்படுகின்ற காய்ச்சலினால் NSW மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மரணங்கள் கடந்த ஆறு மாதங்களில் 66 என்று பதிவாகியிருக்கின்றன.
NSW மாநிலத்தில் கடந்த வருடம் இந்தக்காலப்பகுதியில் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 2500 பேர் குணமாக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்த வருடம் கடந்த ஜூன் மாதத்துடன் 23 ஆயிரத்து 600 பேர் இவ்வாறு வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கடந்த மார் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 60 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
