லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் வரிச்சலுகை அறிவிப்பினால் பரவசமடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் தொலைபேசி அழைப்புக்களினால் ATO-வரித்திணைக்களம் திணறிப்போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சிக்கு வந்துள்ள புதிய லிபரல் கூட்டணி அரசாங்கம் தேர்தல் காலத்தின்போது முன்வைத்த வாக்குறுதியின் பிரகாரம், இந்த நிதியாண்டிலிருந்து ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வருமான வரியை தாக்கல்செய்யும்போது 1080 டொலர்களை மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.
லிபரல் அரசாங்கம் கொண்டுவந்துள்ள 158 பில்லியன் டொலர் வரிக்குறைப்பின் பிரகாரம், கடந்த 2018 - 19 நிதியாண்டில் 48 ஆயிரம் டொலர்களுக்கும் 90 ஆயிரம் டொலர்களுக்கும் இடையில் வருமானம் ஈட்டியவர்கள் 1080 டொலர்கள் வரிக்குறைப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்தச் செய்தி வெளியானவுடன், இம்முறை வருமான வரியை தாக்கல்செய்பவர்கள் மிகுந்த பரவசமடைந்து வரித்திணைக்களத்திடம் தங்களது தகுதியை உறுதி செய்வதற்காக அழைக்கத்தொடங்கியிருக்கிறார்கள்.
வரித்திணைக்களத்தின் தகவல்படி, கடந்த வியாழக்கிழமை மாத்திரம் சுமார் 90 ஆயிரம் பேர் அழைப்பினை மேற்கொண்டிருந்ததாகவும் தொடர்ந்தும் அழைப்புக்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரித்திணைக்களத்தில் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதால், பகுதி நேர பணியாளர்கள் முழுநேரமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் முழு நேர பணியாளர்கள் மேலதிக வேலைக்கு கேட்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
