SKIP TO MAIN CONTENT

‘கால்பந்து ஆட்டத்தின் பிதாமகன் மரடோனா’ - உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி!

Diego Maradona holding the World Cup in Mexico in 1986
Diego Maradona holding the World Cup in Mexico in 1986 Source: AAP

3 min read

Published


Skip to article content

கால்பந்து உலகின் பிதாமகன் எனப் போற்றப்படும் டியேகோ மரடோனா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. 

அர்ஜென்டினாவில் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஏழைக் குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தார் டியேகோ ஆர்மன்டோ மரடோனா.

தனது சிறுவயதிலிருந்தே கால்பந்து ஆட்டத்தின் மீது இருந்த தீராத காதலால், சகதியில் கால்பந்து ஆடி பின் கால்பந்து உலகின் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக மாறினார் மரடோனா.

Outside the San Paolo stadium in Naples, people gather to pay homage to the Diego Armando Maradona.
Outside the San Paolo stadium in Naples, people gather to pay homage to the Diego Armando Maradona. Source: AAP

1977 ஆம் ஆண்டு ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக தனது 16வது வயதில் சர்வதேச போட்டியில் தடம் பதித்தார்.

அன்று முதல் 1994ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்திருக்கும் மரடோனா, அந்நாட்டிற்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தார்.

அந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி, மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் மரடோனா. ஆனால் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று கருதப்பட்ட மரடோனா, அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கினார்.

1986ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், மரடோனா அடித்த பந்து மரடோனாவின் கையில் பட்டு வலைக்குள் விழுந்தது என பெரும் சர்ச்சை எழுந்தபோது சற்றும் பதற்றமடையாத அவர், ”பந்து எனது கையில் படவில்லை, கடவுளின் கைதான் பந்தைத் தொட்டு கோலாக்கியது” எனக்கூறி சமாளித்தது பாரிய சர்ச்சையானது. சில ஆண்டுகள் கழித்து தனது கையில் பந்து பட்டதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

Diego Maradona celebrates a goal against Italy at the 1986 FIFA World Cup
Diego Maradona celebrates a goal against Italy at the 1986 FIFA World Cup Source: Getty Images

அதேநேரம் இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா அடித்த மற்றுமொரு கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

1986 கால்பந்து உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து கப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக செயற்பட்ட மரடோனாவை சரிவுப் பாதைக்கு இட்டுச்சென்றது ஊக்கமருந்து விவகாரம். போட்டியொன்றில் ஊக்கமருந்து பயன்படுத்தியமை, போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 1991ம் ஆண்டு இவருக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் 1994 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் கப்டனாக பங்கேற்று ஆடிய மரடோனா அந்த தொடரில் முதல் போட்டியில் கிரீஸ் அணிக்கு எதிராக கோல் அடித்தார். சிறந்த கோல்களில் ஒன்றாக அறியப்படும் அந்த கோலை அடித்த பின் அவர் கண்களை ஆக்ரோஷமாக வைத்துக் கொண்டு கமராவை நோக்கி ஓடி வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து அவருக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதால் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்த உலகக்கோப்பை தொடர்தான் மரடோனா அர்ஜென்டினாவுக்காக கடைசியாக விளையாடிய தொடர். அதன் பின் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. 1995 முதல் 97 வரை கிளப் அணியான போகா ஜூனியர்ஸில் மட்டுமே விளையாடினார்.

இவருடைய போதைப் பழக்கங்களால் மரடோனாவின் புகழ் சரிந்த போதிலும் ரசிகர்கள் அவரை 'தங்க மகன்' என்றே அழைத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்தும் போதைப் பொருள் பயன்பாடு, உடல் எடை உபாதை, மன அழுத்தப் பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்க்கை, காதலிகள் மற்றும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் என பல்வேறு விதமாக ஊடகங்களின் பேசுபொருளாக இருந்த மரடோனா விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்படும் நபர் என்றும் பல்வேறு காரணங்களுக்காக அறியப்பட்டார்.

A shirt with an image of Diego Maradona on a fence in Buenos Aires, Argentina
A shirt with an image of Diego Maradona on a fence in Buenos Aires, Argentina Source: Getty Images

2010-ல் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக மரடோனா மீண்டும் உலகக்கோப்பை அரங்குக்குள் வந்தார். ஆனால், அர்ஜென்டினாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

தனது இறுதிமூச்சு வரை கால்பந்தாட்டத்தை உயிர் மூச்சாக சுவாசித்த மரடோனாவுக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபின்னணியில் தற்போது மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

அவரைப் பார்த்து கால்பந்து ஆடத் துவங்கிய பலர் இன்று உலகின் முன்னணி வீரர்களாக உள்ள பின்னணியில் உலகெங்குமுள்ள ரசிகர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தமது அஞ்சலிகளை செலுத்திவருகின்றனர்.

பிரேசிலுக்கு பீலே அர்ஜென்டினாவுக்கு மரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்த மரடோனாவையும் பீலேயையும் ஃபிஃபா அமைப்பு நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர்களாக தேர்வு செய்து மிக உயர்ந்த கவுரவத்தை 2000-ம் ஆண்டு வழங்கியிருந்தது.

மரடோனா மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ள பிரேசில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே தனது டிவிட்டரில் “ஒருநாள் இருவரும் இணைந்து வானத்தில் புட்பால் விளையாடுவோம்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நண்பரை இழந்துள்ளதாகவும் உலகம் கால்பந்தாட்ட ஜாம்பாவானை இழந்து தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Maradona
Source: AFP

மரடோனா ஒரு விளையாட்டு வீரர் மட்டுமல்ல புரட்சிக்காரர் என்று சொல்லுமளவிற்கு உலக அரங்கில் அதிகாரமிக்கவர்களால் ஒடுக்கப்படும் இனக் குழுக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய நாட்டின் புரட்சியாளர், சே குவேராவை ஏற்றுக்கொண்டதால்தான் மரடோனாவுக்கு சோஷியலிஸ்ட் மற்றும் இடதுசாரி கொள்கையின் மீது நாட்டம் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் கஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான மரடோனா தன்னுடைய கையில் சே குவேராவின் டாட்டூவையும், காலில் ஃபிடல் கஸ்ட்ரோவின் டாட்டூவையும் போட்டிருந்தார். அதேநேரம் ஃபிடல் கஸ்ட்ரோவின் நினைவு நாளான நவம்பர் 25ம் திகதியே மரடோனாவும் மரணமடைந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை மரடோனாவின் மறைவை முன்னிட்டு, அர்ஜென்டினாவில் 3 நாள்களுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

மரடோனா அளவுக்கு வேறெந்த வீரரும் துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று சொல்லுமளவுக்கு கால்பந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த மரடோனா இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவரது புகழுக்கு எப்போதும் அழிவில்லை.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now