அகதிகளை தடுத்துவைப்பதற்கு தனது நாட்டில் இடமளிக்கும் முகமாக ஆஸ்திரேலிய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது வாழ்வில் தான் இழைத்த மிகப்பெரிய தவறு என்றும் 7 வருடங்களுக்கு முன்னர் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டினை எண்ணி இன்றும் தான் வருந்துவதாகவும் நவுறு தீவின் முன்னாள் அதிபர் Sprent Dabwido கூறியுள்ளார்.
Network Ten தொலைக்காட்சியின் Project நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்ட தகவல்களை அவர் குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஜூலியா கிலார்ட் தமது நாட்டுடன் செய்துகொண்ட அகதிகள் ஒப்பந்தமானது தமது நாட்டுக்கு மிகுந்த பயன்தரும் என்று அப்போது தான் நம்பியதாகவும் ஆனால், அந்த ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தாங்கள் நினைத்ததைவிட மிக அதிகமான பிரச்சினைகளை உருவாக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் செய்துகொண்ட நவுறு அரசின் ஒப்பந்தமானது பிசாசுடன் செய்துகொண்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்பானது. மரணப்படுக்கையிலிருந்து பாவமன்னிப்புக்கு இறைஞ்சுவதற்கு சமனான சித்திரவதைக்கு சமனானது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து மீளவேண்டுமாயின், நவுறு அரசு இனியாவது இரத்தத்தின் மீது ஆட்சி நடத்திக்கொண்டிராமல் தன்னை மாற்றியமைக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
