ஆஸ்திரேலிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு ஆஸ்திரேலிய விசாரணைக்குழு ஆப்கானிஸ்தான் பயணமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்ற விசாரணைக்குழுவினர் அண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரது வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேச நாட்டு படைகளுடன் இணைந்து சுமார் 18 வருடங்கள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ஆஸ்திரேலிய படையினர் அங்கு மேற்கொண்டதாக கூறப்படும் சில போர்க்குற்ற சம்பவங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டுள்ளது என்றும் பயணம் செய்வதற்கு ஆபத்தான பிரதேசங்களாக உள்ளபோதும் குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் இடங்களுக்கு இந்த விசாரணைக்குழுவினர் சென்று வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர் என்றும் ABC தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஒரு சம்பவத்தில் ஆயுதம் தரிக்காதவர்கள் ஆஸ்திரேலிய படையினரால் புறநகர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய படையினர் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரை தேடிச்சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், படையினரால் சுவரில் தூக்கி எறியப்பட்டார் என்றும் அப்பகுதி மக்களை மேற்கோள்காட்டி ABC தெரிவித்துள்ளது. அந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மூவரில் இருவர் ஆயுதங்கள் எதுவும் வைத்திராதவர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளார்கள்.
இதேபோல, இன்னொரு சம்பவத்தில் தங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய வர்த்தகர் ஒருவரை தாங்கள் சுட்டுக்கொன்றதாக ஆஸ்திரேலிய படையினர் கூறுகிறார்கள். ஆனால் அந்தசம்பவத்தின்போது, குறிப்பிட்ட வர்த்தகருக்கு அருகே போர்வையின் கீழ் படுத்திருந்த அவரது குழந்தையின் கூற்றுப்படி அவர் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அப்பகுதி மக்களும் அதையே கூறியுள்ளார்கள். இப்படியான சம்பவங்களை விசாரிப்பதற்கே விசாரணைக்குழுவினர் அங்கு சென்றுள்ளார்கள்.
